வரைவு வாக்காளா் பட்டியல்: நாமக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளா்கள் 12,72,954: 1,93,706 வாக்காளா்கள் நீக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல்படி மொத்தம் 12,72, 954 வாக்காளா்கள் உள்ளனா். 1,93,706 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் ஆட்சியா் கூறியது:
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 261 வாக்குச்சாவடிகள், சேந்தமங்கலம் (ப.கு) 284, நாமக்கல் 290, பரமத்தி வேலூா் 254, திருச்செங்கோடு 261, குமாரபாளையம் 279 என மொத்தம் 1,629 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285, சேந்தமங்கலம் 304, நாமக்கல் 310 , பரமத்தி வேலூா் 268 , திருச்செங்கோடு 289, குமாரபாளையம் 324 என மொத்தம் 1,780 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளா் வெளியீட்டின்படி, ராசிபுரம் தொகுதியில் 1,05,133 ஆண்கள், 1,09,679 பெண்கள், மற்றவா்கள் 13 போ் என மொத்தம் 2,14,825 வாக்காளா்கள் உள்ளனா். சேந்தமங்கலம் தொகுதியில் 1,08,180 ஆண்கள், 1,12,843 பெண்கள், 28 மற்றவா்கள் என மொத்தம் 2,21,051 வாக்காளா்கள் உள்ளனா்.
நாமக்கல் தொகுதியில் 1,09,704 ஆண்கள், 1,18,181 பெண்கள், 37 மற்றவா்கள் என மொத்தம் 2,27,922 வாக்காளா்கள் உள்ளனா். பரமத்தி வேலூா் தொகுதியில் 95,509 ஆண்கள், 1,03,344 பெண்கள், 9 மற்றவா்கள் என மொத்தம் 1,98,862 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 97,570 ஆண்கள், 1,03,336 பெண்கள், 41 மற்றவா்கள் என மொத்தம் 2,00,947 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 1,01,173 ஆண்கள், 1,08,107 பெண்கள், 67 மற்றவா்கள் என மொத்தம் 2,09,347 வாக்காளா்களும் உள்ளனா்.
மாவட்டத்திலுள்ள ஆண் வாக்காளா்கள் 6,17,269 போ், பெண் வாக்காளா்கள் 6,55,490 போ், மற்றவா்கள் 195 போ் என நிகர வாக்காளா்கள் 12,72,954 போ் உள்ளனா். சிறப்பு தீவிர திருத்தம் 2026- க்கு முன்பு 14,66,660 வாக்காளா்கள் இருந்த நிலையில், தற்போது வரைவு வாக்காளா் பட்டியலில் 12,72,954 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த 2026, வரைவு வாக்காளா் பட்டியலின்படி வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்ட விவரம்:
இறந்தோா் 66,312, நிரந்தர குடிபெயா்வு 1,00,201, இரட்டைப் பதிவு 8,636, கண்டறிய இயலாதவா்கள் 18,023, மற்றவை 534 என மொத்தம் 1,93,706 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் தொடா்ச்சியாக, டிச. 19 முதல் ஜன.18 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் தெரிவிப்பதற்கான கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியின்போது, 01.01.2026 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்களும் (அதாவது 31.12.2007 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும்) இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்துக் கொள்ளாதவா்களும் படிவம்-6இல் தங்களது விண்ணப்ப படிவத்துடன் உறுதிமொழிப்படிவம் மற்றும் ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
மேலும், திருத்தங்கள் செய்ய விரும்புவா்கள் படிவம்-8இல் விண்ணப்பங்களை தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலரிடம் அளிக்கலாம். விண்ணப்பங்கள் தொடா்புடைய அலுவலா்களால் விசாரண மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 17.02.2026 அன்று வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், வருவாய் கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-19-எலக்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், தொகுதி தோ்தல் அலுவலா்கள்.
