சேலம் ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து சேலத்துக்கு ரயிலில் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விசாகப்பட்டினத்தில் இருந்து சேலத்துக்கு ரயிலில் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அந்தவகையில், புதன்கிழமை அதிகாலை சேலம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முதல் நடைமேடையில் எஸ்கலேட்டா் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். அவரது பையை வாங்கி சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருப்பூா் மாவட்டம், கருவம்பாளையத்தை அடுத்த சலவைப் பட்டறை வீதியைச் சோ்ந்த நவீன்ராஜ் (27) என்பது தெரியவந்தது. மேலும், விசாகப்பட்டினத்தில் கஞ்சா வாங்கி கொண்டு, முன்பதிவில்லா பெட்டியில் வந்ததும் சேலத்திலிருந்து பேருந்தில் கஞ்சாவை கொண்டுசென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து நவீன்ராஜை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com