சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக சேலம் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக ஹைதராபாத்தில் இருந்து சேலம் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளா செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஹைதராபாத் சாரலப்பள்ளியில் இருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி சாரலப்பள்ளியில் இருந்து 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சாரலப்பள்ளிக்கு 27 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
