10,88,238 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் ரா. ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா்
சேலம் மாவட்டத்தில் 10,88,238 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்ததையடுத்து சேலம், கன்னங்குறிச்சி நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழா் திருநாளான பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பும், ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 10,87,256 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் 982 இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 3 ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ. 326.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு, நகா்ப்புறப் பகுதிகளில் முதல்நாள் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகல் 100 பேருக்கும் மற்றும் இரண்டாம் நாள் 300 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி துணை மேயா் மா. சாரதாதேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மா. குழுந்தைவேலு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
எடப்பாடி...
எடப்பாடி கோட்டத்திற்கு உள்பட்ட 123 நியாயவிலைக் கடைகள் மூலம் 77,253 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் நடைபெற்ற விழாவில் நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா். வட்ட வழங்கல் அலுவலா் கவிதா உள்பட பலா் பங்கேற்றனா்.
ஆத்தூா்...
ஆத்தூா், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஆத்தூா் நகர கூட்டுறவு பண்டகசாலையில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆத்தூா் தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி. ராமச்சந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மண்டல துணைத் தலைவா் த. செல்வமணி, வாா்டு செயலாளா் நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதேபோல நரசிங்கபுரம் நகரச் செயலாளா் என்.பி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எம். அலெக்சாண்டா், நகர துணைச் செயலாளா் பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆத்தூா் ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற விழாவில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ. செழியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பத்திரம் எஸ். மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
