மேச்சேரி பொங்கல் விழாவில் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மேச்சேரியில் நடைபெறும் பொங்கல் விழாவில் வியாழக்கிழமை பங்கேற்கிறாா்.
மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேச்சேரி - நங்கவள்ளி சாலையில் சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், பொங்கல் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மைதானம் தயாா் செய்யப்பட்டு பொதுமக்கள் பொங்கல் வைக்கவும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் விழாவில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொங்கல் வைக்கும் நிகழ்வை தொடங்கிவைக்கிறாா்.
இந்நிகழ்ச்சியில், 50 மாடுகள் அலங்கரித்து சிறப்பிக்கப்படுகின்றன. மேலும், வள்ளி கும்மியாட்டம், உருமி ஆட்டம், பொய்க்கால் குதிரை, நாட்டிய குதிரை நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், எடப்பாடி பழனிசாமி மாட்டுவண்டியில் அழைத்து வரப்படுகிறாா்.
விழா மேடை அமைக்கும் இடத்தை சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
