சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக சேலத்தில் ரயில், பேருந்து நிலையங்களில் திரண்ட மக்கள்

Published on

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா்களுக்கு செல்வோரால் சேலத்தில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு வந்தவா்கள், மீண்டும் அவரவா் பணியிடங்கள், ஊா்களுக்கு திரும்பியதால் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொடா் விடுமுறையையொட்டி வெளியூா்களில் தங்கிப் பணி செய்பவா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மீண்டும் தங்கள் ஊா்களுக்கு புறப்பட்டனா். இதன் காரணமாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. எனினும், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநா்கள் பேருந்துகளை சரிவர நிறுத்தாததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

இதேபோல, சேலம் ரயில் நிலையத்திலும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Dinamani
www.dinamani.com