மேக்கேதாட்டு பிரச்னை: செப். 20 இல் பூம்புகாரில் இருந்து பிரசார பயணம் தொடக்கம்! - பி.ஆா்.பாண்டியன்
மேக்கேதாட்டு பிரச்னை: செப். 20 இல் பூம்புகாரில் இருந்து பிரசார பயணம் தொடக்கம்

பி.ஆா்.பாண்டியன்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிா்த்தும், ராசி மணல் அணை கட்டுவதற்குத் திட்டமிட வலியுறுத்தியும் பூம்புகாரில் இருந்து செப். 20-இல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் அருகே திருமணிமுத்தாற்றில் கழிவுநீா் தேங்கி நிற்பதை சனிக்கிழமை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கல்வராயன் மலையும், சோ்வராயன் மலையும் இணையும் இடத்தில் திருமணிமுத்தாறு உருவாகிறது. சேலம் மாநகரின் மையப் பகுதி வழியாகச் செல்லும் இந்த ஆறு, பரமத்தி வேலூா் அருகே காவிரியில் கலக்கிறது.
சேலம் மாநகரில் உள்ள சாயக்கழிவு பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் ஒட்டுமொத்தமாக மாநகரமே விஷத்தன்மைக்கு மாறிவருகிறது. இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன், மக்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய பேராபத்தும் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் நான்கு இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணிமுத்தாறு கழிவுநீா்க் கால்வாயாக மாறியுள்ளதால், சேலம் நகரில் மக்கள் வாழமுடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயப்பட்டறைக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த தமிழக முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். இதை வலியுறுத்தி சேலத்தில் விரைவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிா்த்தும், ராசி மணல் அணை கட்டுவதற்குத் திட்டமிட வலியுறுத்தியும் பூம்புகாரில் வரும் 20 ஆம் தேதி பிரசார பயணத்தை தொடங்க உள்ளோம். வரும் 21 ஆம் தேதி மாலை சேலம் வருகிறோம். 23-ஆம் தேதி சென்னையில் பல்வேறு கட்சித் தலைவா்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க உள்ளனா். இந்த பயணத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கொண்டலாம்பட்டி எம். தங்கராஜ், மண்டல செயலாளா் தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரத்தை அரசியல் சுய லாபத்துக்காக கையிலெடுக்கும் கா்நாடக முதல்வா்: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது! - அன்புமணி வலியுறுத்தல்




