விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பள்ளிகளில் காட்சிப் பொருளாகிவரும் கணினிகள்!

மதுரை, நவ. 9: கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படாததால் அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணினிக் கருவிகள் போதிய பயனின்றிக் காட்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:09 pm

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, நவ. 9: கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படாததால் அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணினிக் கருவிகள் போதிய பயனின்றிக் காட்சிப் பொருள்களாகி வருகின்றன.

 தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் பயன்பாடு நாட்டின் வருங்காலத் தூண்களான பள்ளி மாணவர்களைச் சென்றடைய,

 அரசுப் பள்ளிகளில் கணினிக் கல்வியைப் புகுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

 இதனால், அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளில் கணினி வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம்

 அளிக்கப்பட்டு வருகிறது.

 தமிழகத்தில் பொதுக் கல்வியில் சுமார் 54 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசு உயர்நிலைப் பள்ளிகள் சுமார் 3 ஆயிரமும், நடுநிலைப் பள்ளிகள் சுமார் 6 ஆயிரமும் உள்ளன.

 கடந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் 2010-11-ம் ஆண்டுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 10,147.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ. 1249.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 831 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 115 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 50 கோடி செலவில் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பெரும்பாலானவற்றுக்கு கணினிக் கருவிகள், மடிக் கணினிகள் தொடக்கக் கல்வித் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இதேபோன்று கணினிக் கருவிகள் இணையதள வசதியுடன் வழங்கப்பட்டுள்ளன.

 இருப்பினும், மேல்நிலைப் பள்ளிகளில் கணினிப் பாடப் பிரிவு இருப்பதால், அங்கு கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிற அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கணினிக் கருவிகளை இயக்குவதற்கும் மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்கும் என பிரத்தியேகமாக கணினி ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

 இதனால், பெரும்பாலான பள்ளிகளில் கணினிக் கருவிகளும், மடிக் கணினிகளும் காட்சிப் பொருளாகவே உள்ளன. சில பள்ளிகளில், ஆசிரியர்களின் ஈடுபாடு காரணமாக மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 பல ஊராட்சிப் பள்ளிகளில் மடிக் கணினிகள் ஆசிரியர்கள் பொறுப்பில் விடப்படுவதால், சிலர் அவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று வருவதும் பொதுமக்கள் அறிந்த ஒன்றுதான்.

 மாணவர்களுக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சியை அளிப்பதற்காக நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் பாட ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி ஓரிரு வாரங்கள் மட்டுமே அளிக்கப்படுகிறது. கூடுதல் பணிப் பளு காரணமாக, வகுப்புப் பாடங்களை விடுத்து மாணவர்களுக்கு கணினிப் பயிற்சியை அளிக்க பலரும் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

 இதனால், அரசு, மாநகராட்சிப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினிக் கருவிகள், மடிக் கணினிகள் பலவும் பள்ளி அறைகளில் தூசி படிந்த நிலையில் பயனின்றிக் கிடப்பதாக ஆசிரியர்களே கவலை தெரிவிக்கும் நிலை உள்ளது.

 பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஆசிரியர்கள் ஒருபுறம் தெரிவித்தாலும், நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் அளவில் கணினி ஆசிரியர்களை அரசு ஏன் நியமிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்குவதில் அரசு தாமதம் காட்டினால், மாணவர்களுக்கு இலவச பாடநூல், இலவச சைக்கிள், இலவச சீருடை, இலவச பஸ் பாஸ் என்ற வரிசைப் பட்டியலில் இக் கணினிக் கருவிகளும் இடம்பெற பயன்படுமே தவிர மாணவர்களுக்கு நன்மை பயக்குமா என்பது சந்தேகமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.