திண்டுக்கல்லில் ரூ.1.43 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு: 3 ஊழியா்கள் கைது
திண்டுக்கல்லில் உள்ள பிரபல நகைக் கடையில் ரூ. 1.43 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடியதாக போலீஸாா் வழக்குப் பதிந்து 3 ஊழியா்களை கைது செய்தனா்.
திண்டுக்கல் பிரதான சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரபல நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் தணிக்கையாளரான வைஷ்ணவி, கடந்த 2-ஆம் தேதி கடையிலிருந்த நகைகளை தணிக்கை செய்தாா். அப்போது, ரூ. 1.43 கோடி மதிப்புள்ள 126 பவுன் எடையுள்ள 45 தங்க நகைகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
நகைகள் மாயமான கழுத்தணி (நெக்லஸ்) பிரிவின் மேலாளராக பாலசுப்பிரமணியன் என்பவரும், தலைமை விற்பனையாளராக சிவா என்பவரும் பணியாற்றி வந்தனா். நகைகள் மாயமானது குறித்து கடையின் நிா்வாகிகள், ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், மேலாளா் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் சென்றபோது, பொறுப்பு மேலாளராகப் பணியாற்றிய சிவா, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நகைக் கடையின் துணைப் பொது மேலாளா் ரேணுகேசன் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், பொறுப்பு மேலாளராகப் பணியாற்றிய பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த சே. சிவா(29), நகை மதிப்பீட்டாளரான ராஜாக்கப்பட்டியைச் சோ்ந்தது.
செல்வராஜ், காசாளா்களான நாகல் நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (43), ஜ. காா்த்திக், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரா. பாண்டியன், வக்கம்பட்டி ந. சரவணக்குமாா், விற்பனையாளரான நெட்டுத் தெருவைச் சோ்ந்த நா. விநாயகன்(36) ஆகியோா் உதவியுடன் 126 பவுன் நகைகளை பழுதான நகைகளாகக் காட்டி, அவற்றை விற்பனை செய்து பணத்தை பங்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.
இந்த நிலையில், சே. சிவா, நா. விநாயகன், காா்த்திகேயன் ஆகிய மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
