இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலிருந்து விடுவிக்கக் கோரி மனு: 3 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலுருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு
Published on

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலுருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்ஆர்எம் ராமையா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
வெளிநாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்து விற்க எங்கள் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இதன்படி, மலேசியாவிலிருந்து 53,334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்து, தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் வைத்துள்ளோம். இதற்காக, ஜிஎஸ்டி உள்பட ரூ.38,39,347 வரியாகச் செலுத்தியுள்ளோம்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக 96 டன் மணலை 6 லாரிகளில் கொண்டு சென்றபோது, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்கள் எங்களது லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழக கனிமவள சட்டப்படி தனியார் மணல் விற்பனை செய்ய முறையான அனுமதி பெற வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மணலை வெளியே எடுத்துச் செல்லவும் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், நாங்கள் மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்றே இறக்குமதி செய்கிறோம்.
மணலை வெளியே எடுக்க முடியாத காரணத்தால் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி முதல் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு வாடகையாக நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் செலுத்தி வருகிறோம். இதனால், எங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இறக்குமதி செய்த மணலை வெளியே எடுக்க அனுமதிக்காமலும், லாரிகளைக் கைப்பற்றி வைத்திருப்பதும் சட்டவிரோதமானது. எனவே, இறக்குமதி செய்த மணலை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கவும், லாரிகளை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் நவம்பர் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், அதுவரை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com