சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம்: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர், எம்.பி.,  எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

மதுரை நகரில் சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் முறைப்படி பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சிக்கு அமைச்சர், எம்.பி. மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Updated on
1 min read

மதுரை நகரில் சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் முறைப்படி பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சிக்கு அமைச்சர், எம்.பி. மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் டெங்கு பாதிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது: மதுரையில் இரவு பகலாக டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டதால், ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் இளைத்துவிட்டனர். ஒரு சில அதிகாரிகள் பொறுப்புடன் செயல்படுவதில்லை. இத்தகைய போக்கு அனைத்து துறைகளிலும் உள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் டெங்கு இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். கொசு புழு கண்டறிந்து அபராதம் விதிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கால அவகாசம் தரவேண்டும்.
அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல. சம்பந்தப்பட்டவர்களின் அஜாக்கிரதையால் டெங்கு பரவுவதைத் தடுக்கவே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் செல்லூர் பகுதியில் எனது வீட்டருகே கழிவுநீர் கால்வாய் சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பல வார்டுகளின் கழிவு நீர் ஒருசேர வருவதால் கசிவு ஏற்படுகிறது. எனவே, அதை சீராக்குவதற்கு 50 வார்டுகளுக்கு ஒரு கழிவுநீரேற்று நிலையம் அமைப்பது நல்லது.
குடிநீர் விநியோகத்திலும் தற்போது சில பகுதியில் பிரச்னை உள்ளது. பிளம்பர்களை நியமித்து பிரச்னையை சீர்படுத்தவேண்டும். குப்பை அகற்றும் எந்திரம் வாங்க சட்டப்பேரவைத் தொகுதி நிதியிலிருந்து ரூ. 54 லட்சம் ஒதுக்கத் தயாராக உள்ளேன்.மதுரை மாநகராட்சிக்கு கழிவுநீர் கால்வாயில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க நவீன எந்திரங்கள் அவசியம். செல்லூர் கீழத்தோப்பு பகுதியில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சி மீது குறை கூறவேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றனர். ஊடகங்கள் நல்லதை பாராட்டிவிட்டு குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் பாராட்டுகின்றனர். எனவே, நாம் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும், என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.
மக்களவை உறுப்பினர் ஆர். கோபாலகிருஷ்ணன் பேசியது: மாநகராட்சி பிரதான அலுவலக வளாகம், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை முதலில் சீர்படுத்தவேண்டும்.  மக்களிடம் டெங்கு கொசு பரவல் குறித்து எச்சரித்து அவர்களிடம் கையெழுத்து பெறவேண்டும். அதன்பிறகே அபராதம் விதிக்கவேண்டும். தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பேசியது:  சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்குகிறது. அதை உடனடியாக சீர்படுத்தாத மாநகராட்சி அலுவலர்கள், தனிநபர்  வீட்டுக்கு அதிக அபராதம் விதிப்பது சரியல்ல.  வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா: கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தவேண்டும். அதற்கு தனி நிதி ஒதுக்கவேண்டும். டெங்கு ஒழிப்பில் மதுரை மாநகராட்சி முன்மாதிரியாக இருந்தாலும், கால்வாய்களில் குப்பைகளை அகற்ற போதிய வாகன வசதியில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com