தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில் எய்ட்ஸ் பரவுவதை தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறு வாழ்வு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்துக்கு பல கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இப்பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் சரியாக மேற்கொள்வதில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகள் இருவருக்கு ஹெச்ஐவி இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கையிலும் ஒரு சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது.
தற்போது சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தியுள்ள விவகாரம் வெளிவந்துள்ளது. அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.
தமிழகத்தில் பல அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளில் உரிய கல்வித்தகுதி இல்லாத ஒப்பந்த பணியாளர்களே பணிபுரிகின்றனர். இதனால் ரத்தம் தேவைப்படும் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த மூன்றாண்டுகளில் பலரிடம் தானமாக பெறப்பட்ட பல லட்சம் யூனிட் ரத்தம் மருத்துவ துறையின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் வீணடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2016 வரை தவறாக ரத்தம் செலுத்தப்பட்டதால் 2,234 பேருக்கு ஹெச்ஐவி பரவியுள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்கவும், ரத்த தானம் செய்பவர்கள், பெறுவோரின் விவரங்களை பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசுத்தரப்பில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் உரிய கல்வித்தகுதி உடையவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


