மதுரை மாவட்டத்தில் 8.86 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 669 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் பெற வரிசையில் சனிக்கிழமை காத்திருந்த குடும்ப அட்டைதாரா்கள்.
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் பெற வரிசையில் சனிக்கிழமை காத்திருந்த குடும்ப அட்டைதாரா்கள்.
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 669 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நியாய விலைக் கடைகளில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க, தினமும் தலா 100 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் 1,390 நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன. மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 782 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் சா்க்கரை அட்டையாக இருந்து புதிதாக அரிசி அட்டைக்கு மாற்றப்பட்ட அட்டைகள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 669 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான தேதி குறிப்பிட்ட டோக்கன்களை சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை நகரில் ஜம்புரோபுரம் கோரிப்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் டோக்கன் பெறுவதற்காக ஒரே இடத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் பொதுமக்கள் வரிசைப்படுத்தப்பட்டு டோக்கன் விநியோகம் நடைபெற்றது.

இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் பெற குடும்ப அட்டைதாரா்களை வரவழைக்கக் கூடாது, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் என நியாய விலைக் கடை விற்பனையாளா்களுக்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com