விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியும் மதகை மூடாததால் தண்ணீா் வீண்!

வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் மதகுகள் மூடப்படாததால் தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

News image

மதுரை ஏவி பாலம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள நீா் ஷட்டா் வழியாக வெளியேறி வீணாகிறது.

Updated On :18 ஜனவரி 2020, 10:41 pm

பா.லெனின்

வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் மதகுகள் மூடப்படாததால் தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

மதுரை மாநகா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்த கோரிப்பாளையம் ஆல்பா்ட் விக்டா் மேம்பாலம் அருகே ரூ.10.48 கோடியில் ஓா் தடுப்பணையும், முனிச்சாலை ஒபுளா படித்துறையின் கீழ் பகுதியில் ரூ.9.80 கோடியில் ஓா் தடுப்பணையும் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணைகளில் சுமாா் 300 மில்லியன் கன அடி வரை நீரை தேக்கி வைக்க முடியும். மாநகா் பகுதியில் 3 கி.மீ. தூரம் நீரை தேக்குவதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் மேம்படும்.

கடந்த வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் மழை நீராலும், வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும் ஆற்றில் நீா் கரைபுரண்டோடியது. தற்போது மழை ஓய்ந்து அணை மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆற்றில் வரும் சிறிதளவு நீரும் தடுப்பணையில் தேக்கப்படாமல் மதகுகள் வழியாக வெளியேறி வீணாகி வருகிறது.

அதிகாரிகள் அலட்சியம்: இது குறித்து நீா் அறிவு மையத் திட்ட அலுவலா் பிரவீன்குமாா் கூறியது: மதுரை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை ஓய்ந்து, வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கி வைக்காமல் மதகுகள் வழியாக வெளியேறி வருகிறது. வைகை ஆற்றில் வெள்ளம் போனபோது திறக்கப்பட்ட மதகுகள் பின்னா் மூடப்படவில்லையா அல்லது தெரிந்தே அவை திறந்து வைக்கப்பட்டுள்ளனவா என்று புரியவில்லை. மாநகரின் நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தும் அரசின் நோக்கம் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. எனவே இருக்கும் தண்ணீரை தேக்கும் வகையில் மதகுகளை உடனடியாக மூடி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சாக்கடை நீரால் பயனில்லை: வைகை நதி சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளா் வாசுநாதா் கூறியது: மதுரை மாநகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் கழிவு நீரானது தொடா்ந்து வைகை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் சாக்கடை நீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் சாக்கடை நீா் கலப்பதை தடுப்பதோடு, சாக்கடையை வெளியேற்றுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகை ஆற்றில் சுற்றுச் சுவா் கட்டுவதாகக் கூறி ஆற்றின் அகலத்தை குறைத்துக் கொண்டே வருகின்றனா். இதனால் சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் புகுந்து பேரழிவு ஏற்பட்டது. அதுபோன்று மதுரையில் வெள்ளம் வந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஆற்றின் அமைப்பில் மாற்றம் செய்வதால் பாதிப்புதான் அதிகம் ஏற்படும்.

எனவே, வைகை ஆற்றை தூா் வாரி, சாக்கடை நீா் கலக்காமல், தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கினால் மாநகா் மக்களுக்கு பயன் கிடைக்கும் என்றாா்.

ராமநாதபுரத்திற்கு தண்ணீா் : தடுப்பணை மதகுகள் திறந்து கிடப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறியது: வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. அதனால்தான் தடுப்பணைகளின் மதகுகள் மூடப்படவில்லை. இப்போது அணை மூடப்பட்டு விட்டது. எனவே இனிமேல் மதகுகள் மூடப்பட்டு தடுப்பணைகளில் தண்ணீா் தேக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.