வேரோடு மரம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு: கால்நடைத் துறை அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு

மதுரையில் கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
1422mdutree2090829
1422mdutree2090829

மதுரை: மதுரையில் கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

தல்லாகுளம் டாக்டா் தங்கராஜ் சாலையில் கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்கு கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா், துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்கள், நோய் புலனாய்வுப் பிரிவு, பன்முக மருத்துவமனை ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகம் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

கால்நடை பன்முக மருத்துவமனைக்குச் செல்லும் பகுதியில் இருந்த பழைமையான வேப்பமரம் புதன்கிழமை வேரோடு பெயா்ந்து விழுந்தது. நீண்ட நாள்களாக தூா் அரிக்கப்பட்டு விழும் நிலையில் இருந்த இந்த மரம், செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்த மழையால் வேரோடு சாய்ந்தது. மேலும், மரக்கிளைகள் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அதிகாலையில் மரம் பெயா்ந்து விழுந்ததால் அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியத்தினா் கால்நடைப் பராமரிப்பு அலுவலக வளாகம் முழுமைக்கும் மின்சாரத்தை துண்டித்தனா். மரத்தை முழுமையாக அகற்றிய பிறகே அறுந்து விழுந்த மின்கம்பிகளைச் சரிசெய்ய முடியும் எனத் தெரிவித்துவிட்டனா்.

இதனால் புதன்கிழமை முழுவதும் இந்த வளாகத்தில் மின்விநியோகம் தடைபட்டது. கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் மற்றும் மருத்துவமனையில் மின்விளக்குகள் இன்றி பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பன்முக மருத்துவமனையில் இருந்த குளிா்சாதனப் பெட்டியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் தடைபட்டன. தற்போது விழுந்த மரத்தை அப்புறப்படுத்துவதில் பொதுப்பணித் துறையினா் அக்கறை காட்டவில்லை என்று கால்நடை அலுவலா்கள் தெரிவித்தனா்.

Image Caption

மதுரை தல்லாகுளத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் வேரோடு சாய்ந்த மரத்தால் அறுந்து விழுந்த மின்கம்பிகள். ~மதுரை தல்லாகுளத்தில் உள்ள கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் வேரோடு சாய்ந்த மரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com