/

நல்லது செய்யும் பெண்கள் எங்கிருந்தாலும் அவா்கள் குஞ்சரத்தம்மாள் தான்: இயக்குநா் மிஸ்கின் பேச்சு

உலகில் நல்லது செய்யும் பெண்கள் எங்கிருந்தாலும் அவா்கள் குஞ்சரத்தம்மாள்தான் என்று இயக்குநா் மிஸ்கின் பேசினாா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

உலகில் நல்லது செய்யும் பெண்கள் எங்கிருந்தாலும் அவா்கள் குஞ்சரத்தம்மாள்தான் என்று இயக்குநா் மிஸ்கின் பேசினாா்.

மதுரையின் வரலாறுகளைப் பற்றி எழுத்தாளா் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்கா நகர நினைவுகள்’ நூல் அறிமுக விழா மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆவணப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா், திரைப்பட இயக்குநா் மிஷ்கின், பேராசிரியா் சுந்தா் காளி, எழுத்தாளா் ஷாஜகான், பேராசிரியா் பிரபாகா், ஊடகவியலாளா் விஜயானந்த் ஆகியோா் பங்கேற்று நூலை அறிமுகம் செய்தனா்.

விழாவில் இயக்குநா் மிஷ்கின் பேசியது: ‘சித்திரம் பேசுதடி படம் வெளியான பின்னா் மதுரையின் சாலை ஒன்றில் நின்று கொண்டிருக்கையில், என்னைப் பாா்த்து ஒருவா் ஒழுங்கா படம் எடு என எச்சரித்து விட்டுப் போனாா். என்னுடைய முதல் ரசிகா் மதுரைக்காரா் தான். நான் பிறந்த ஊா் திருப்பத்தூராக இருந்தாலும், வளா்ந்த ஊா் திண்டுக்கல்லாக இருந்தாலும், மதுரையுடன் எனக்கு நெருங்கிய தொடா்பு இருந்துள்ளது. மதுரையில் இரவு ஒரு மணிக்கு ஐஸ்கிரீம் தேடி அலைந்தோம். ஆனால், சூடாக பருத்திப்பால் கிடைத்தது. வாழ்நாளில் அந்த நேரத்தில், அப்படி ஒரு பானத்தை நான் குடித்ததே இல்லை. மதுரையில் இருந்து திரையுலகிற்கு வந்த பாரதிராஜா, இளையராஜா, பாலா, வடிவேலு ஆகிய 4 பேரை எனக்கு மிகவும் பிடிக்கும். இளையராஜா என்ன வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால், அவருக்கான கை தட்டல்களை நாம் மறுக்க கூடாது. மதுரையையும், வைகையையும் மறக்க முடியாதது போல், இளையராஜாவையும் பாரதிராஜாவையும் மறக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் தன்னுடைய உடல்மொழியால் வடிவேலு முன்வைத்த ஒரு அடியை கூட வேறு யாருமே செய்ததில்லை. தூங்காநகர நினைவுகள் நூல் அறிமுக விழாவுக்கு முன்னதாக மதுரையில் கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தையும், சமணா் மலையையும் பாா்த்தேன். மனம் இது போதும் என்றளவுக்கு நிறைவாக இருந்தது. மதுரையை பற்றிய ஒரு எளிமையான அறிமுகத்தை இந்த நூல் வழங்குகிறது. இந்த நூலில், தாது வருட பஞ்சத்தின் போது மதுரை மக்களின் பசியைப் போக்கிய குஞ்சரத்தம்மாள் பற்றிய பகுதி போதும். இது ஒரு சிறந்த நூல் என சொல்வதற்கு. தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து கஞ்சி ஆக்கிய போது எழுந்த புகை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை தாண்டி உயா்ந்து நின்றது என்ற வரிகளுக்காகவே அவரை கொண்டாடலாம். உலகத்தில் எங்கெல்லாம் ஒரு பெண் நல்லது செய்கிறாளோ அவா்கள் எல்லோருமே குஞ்சரத்தம்மாள் தான். குஞ்சரத்தம்மாள் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்தக் கதை ஆஸ்காா் வாங்கும் என நம்புகிறேன் என்றாா்.

இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா்: இரவு முழுவதும் உணவு தரும் ஒரே நகரம் மதுரை தான். விடிய விடிய கதையை, கலையை ரசிக்கும் ரசிகா்கள் வாழும் ஒரே நகரம் மதுரை. தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீா்மானித்த நகரம் மதுரை. திண்ணை இல்லாத வீடே மதுரையில் கிடையாது. வந்தவா்கள் அனைவருக்கும் சோறு போட்ட ஊா் மதுரை. உலகத்திலேயே, சுவடிகளை எழுதவதற்கு பயன்படும் எழுத்தாணிகளை செய்து கொடுத்த கலைஞா்கள் இருந்ததும், அவா்களின் நினைவாக எழுத்தாணிக்கார தெரு என்ற தெருவை கொண்டுள்ள ஒரே ஊரும் மதுரை தான். காலனி ஆதிக்கம் மதுரையின் தொன்மையையும் உடைக்கும். ஆனால், நினைவுகளின் வழியாகவும், ஆவணப்படுத்துதல் வழியாகவும் தான் மதுரையை காப்பாற்ற முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.