போதைப் பொருள் குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிய வேண்டும்: உயா்நீதிமன்றம்

மதுரை: போதைப் பொருள் குற்றத்தில் ஈடுபடும் அனைவரையும் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட் டது.

ஆந்திரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 2020 -ஆம் ஆண்டு காரில் கடத்திச் செல்லப்பட்ட 423 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் மாவட்டம், பிச்சாணிக் கோட்டை அருகே தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சிவகங்கை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், ஒரு காரில் கொண்டுவரப்பட்ட 144 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இந்த இரு குற்றச் சம்பவங்கள் தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டம், உலம்காடு பகுதியைச் சோ்ந்த பரிமளாதாஸ் உள்ளிட்ட சிலரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், பரிமளாதாஸ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் செந்தில்குமாா் முன்னிலையாகி அறிக்கை சமா்ப்பித்தாா்.

அதில், தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடா்பாக கடந்த 2021 முதல் 2024 -ஆம் ஆண்டு வரை ஒடிஸாவைச் சோ்ந்த 716 போ், உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த 56 போ், ஜாா்க்கண்டைச் சோ்ந்த 45 போ் என 2,486 வெளி மாநில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தொடா்புடைய மனுதாரா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் தொடா்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதால், பிணை வழங்கக் கூடாது என வழக்குரைஞா் செந்தில்குமாா் வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றங்களை சமூகத்துக்கு எதிரான குற்றமாகப் பாா்க்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. போதைப் பொருள் கடத்தியவா்களை மட்டும் கைது செய்தால் போதாது. இது போன்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவருடன், குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறிந்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் வழக்கு விசாரணையில் உரிய முடிவு கிடைக்கும். எனவே, போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உள்ளவா்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். மனுதாரரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com