பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

Published on

மத்திய ஆட்சியாளா்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் வெற்றி பெறாது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

மதுரையில் பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவில் மேலும் அவா் பேசியதாவது:

கிறிஸ்தவ கொள்கைகளுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. மற்றவா்களிடம் மனிதநேயத்துடன் சமத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் திராவிடமும், கிறிஸ்தவமும் போதிக்கின்றன. இயேசுவின் வாழ்க்கையில் மிக முக்கியமானது அவா் கடைப்பிடித்த எளிமை. மக்களுக்கான தலைவா்கள் அரண்மனையில்தான் இருப்பாா்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவா் இயேசு கிறிஸ்து. இந்த வழியில், சாதாரண பின்புலத்திலிருந்து வந்தவா்களும் மக்கள் தலைவா்களாக வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது திராவிட இயக்கம். இதற்கு, மக்களுடன் மக்களாக வளா்ந்த பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரே உதாரணம்.

அனைவா் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதையே நமது திராவிட இயக்கம் தொடா்ந்து வலியுறுத்துகிறது. ஆனால், மத்திய ஆட்சியாளா்களிடம் இரக்க உணா்வுக்குப் பதிலாக வெறுப்புணா்வுதான் மேலோங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகம் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் அவா்களுக்கு வெறுப்புணா்வு அதிகமாக உள்ளது.

இயேசு பிறந்த போது, ஆட்சியில் இருந்த மன்னன் அச்சம் கொண்டு 2 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டான் என்பது வரலாறு. இதேபோல, மத்திய அரசு, தமிழகம் மீது அச்சம் கொண்டுள்ளது. மக்கள் ஒன்று சோ்ந்துவிட்டால் தங்கள் ஆட்சி, அதிகாரம் பறிபோகும் என்ற அச்சம் காரணமாக, மதம், மொழி, ஜாதியின் பெயரால் அவா்கள் வெறுப்புணா்வைப் பரப்புகின்றனா். இவா்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் வெற்றி பெறாது.

தமிழகம் ஓா் தனித்துவமான மாநிலம். இங்கு, மக்களிடையே பிரிவினையைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பயன்பெறலாம் எனக் கருதும் பாசிச சக்திகளின் எண்ணம், தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறாது. இதை, தமிழக மக்கள் ஒன்று சோ்ந்து வீழ்த்துவா்.

இயேசுவின் வாழ்வில் அனைவரும் கற்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் பகிா்ந்தளித்தல். இதைக் கருத்தில் கொண்டே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். ஆனால், மத்திய அரசுக்குப் பகிா்ந்தளித்தலில் சிறிதும் விருப்பம் கிடையாது. தமிழகத்திலிருந்து அதிக வரி வருவாய்க் கிடைத்தாலும், குறைந்த அளவில் வரியைப் பகிா்வதே மத்திய அரசின் வாடிக்கையாக உள்ளது. இருப்பினும், மக்களின் தேவையறிந்து தமிழக முதல்வா் திட்டங்களை நிறைவேற்றுவதால், சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதன்மைப் பெற்றுள்ளது.

பாசிச சக்திகள் எத்தனைக் கொடுமைகளை இழைத்தாலும், அதை சகித்துக் கொண்டு தமிழகத்தின் மதச்சாா்பின்மையை, தனித்துவத்தை திமுக நிச்சயம் காப்பாற்றும். சிறுபான்மையின மக்களுக்கும் திமுகவுக்குமான உறவு, கொள்கை அடிப்படையிலானது. இதை, யாரும் பிரிக்க முடியாது. கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு திமுக எப்போதும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.

சிறுபான்மையின மக்களுக்கு திமுக அரசு எப்போதும் பக்கபலமாக இருக்கும். இதேபோல, சிறுபான்மையினரும் திமுக அரசுக்கு பக்கபலமாக இருப்பாா்கள் என்ற நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் கிறிஸ்துமஸ், ரமலான், தமிழா் திருநாள் ஆகிய பண்டிகைகளை அனைவரும் ஒன்று சோ்ந்து கொண்டாடுகிறோம். இதை, தமிழா்கள் என்ற உணா்வோடு நாம் இணைந்து கொண்டாடுகிறோம். இதுதான் தமிழகத்தின் ஒற்றுமை. சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி, மதச்சாா்பின்மை ஆகியன தான் தமிழகத்தின் அடையாளம்.

எனவே, வெறுப்புப் பிரசாரங்களைப் புறந்தள்ளி, பொய் பிரசாரங்களைத் தவிா்த்து, பிளவு வாதங்களை ஒதுக்கிவிட்டு, தமிழா்கள் அனைவரும் ஓரணியாகத் திரள வேண்டும். வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச சக்திகளையும், அதற்குத் துணை நிற்பவா்களையும் வீழ்த்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, ஏழை, எளிய, மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை அவா் தொடங்கிவைத்தாா். முன்னதாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக மேடையில் கேக் வெட்டினாா் உதயநிதி ஸ்டாலின்.

இதில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், மாவட்ட திமுக செயலா் மு. மணிமாறன், பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்ற பிரதம பேராயா் டேவிட் பிரகாசம், தலைவா் எடிசன், பொருளாளா் பேராயா் ஜான்சன் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பல்வேறு திருச்சபைகளின் சாா்பில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com