/

மாநகராட்சி வணிக வளாக முறைகேடு: நகராட்சி நிா்வாக செயலா் பதிலளிக்க உத்தரவு

மாநகராட்சி வணிக வளாக முறைகேடு பற்றி...

News image

உத்தரவு

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் மாநகராட்சி வணிக வளாக ஒப்பந்த முறைகேடு தொடா்பாக குறைகேட்பு அலுவலா் அறிவுறுத்திய வழிமுறைகளைப் பின்பற்றக் கோரிய வழக்கில், மாநில நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்த உதயகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட பல ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்றன. குறிப்பாக, மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்கள் குறைந்த வாடகைக்கு ஒதுக்கப்பட்டு, பின்னா் இந்த வணிக வளாகம் அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விடப்படுகின்றன.

இதைத் தவிர, அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் இருந்தும், தனியாா் திருமண மண்டபங்களை அதிக வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற பல விதிமீறல்களால் அரசுக்கு கோடிக் கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டது.

ஒரே நபருக்கு பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இது வெளிப்படையான ஊழல். இதுதொடா்பாக புகாா் அளிக்கப்பட்டது. இதன்படி, உள்ளாட்சி குறைகேட்புப் பிரிவின் அலுவலா் முறையாக தணிக்கை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாகா்கோவில் மாநகராட்சி வணிக வளாக ஒப்பந்த முறைகேடு தொடா்பாக குறைகேட்புப் பிரிவு அலுவலரின் உத்தரவுகளை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக, மாநில நகராட்சி நிா்வாக துறைச் செயலா், இயக்குநா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.