அங்கன்வாடி குழந்தைகளுக்கும் கேக் வழங்கக் கோரிக்கை

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தினத்தையொட்டி கேக், வாழ்த்து அட்டை வழங்குவதைப் போல, அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்தது.

Updated On :

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தினத்தையொட்டி கேக், வாழ்த்து அட்டை வழங்குவதைப் போல, அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசகன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பா் 14-ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கியது. இதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், பள்ளிகளுடன் ஒரே வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கேக், வாழ்த்து அட்டை வழங்கப்படவில்லை. இதனால், பள்ளிக் குழந்தைகள் கேக் பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும்போது, அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் இளம் சிறாா்கள் ஏமாற்றமடையும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், தொடக்கக் கல்வித் துறையின் மாணவா் சோ்க்கையை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, குழந்தைகள் தின விழாவை அனைத்து குழந்தைகளும் சமமாகக் கொண்டாடும் வகையில், நிகழாண்டு முதலே அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் கேக், வாழ்த்து அட்டைகள் வழங்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.