/

அம்பான் புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசியதால் 30க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் சேதம் 

வங்கக்கடலில் உறுவாகியுள்ள அம்பான் புயல் எதிரொலியாக ராமேசுவரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் 30க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து விட்டதாக மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 மே 2020, 4:50 am

DIN

வங்கக்கடலில் உறுவாகியுள்ள அம்பான் புயல் எதிரொலியாக ராமேசுவரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் 30க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து விட்டதாக மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, உள்ளிட்ட பகுதிகளில் 1700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளது. இதில் மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் நாட்டுபடகுகள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கக்கடலில் உறுவாகி உள்ள அம்பான் புயல் காரணமாக மீனவர்கள் பதுகாப்புடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் சனிக்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ப்பட்டது. இதன் பின்னர் ஞாயிற்று கிழமை இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

இதனையடுத்து, வங்கக்கடலில் உள்ள அம்பான் புயல் கரையை கடந்து வரும் நிலையில் நள்ளிரவு 11.30 மணிக்கு திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் ராமேசுவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்றது. இதனால் படகுகள் சேதமின்றி தப்பியது. ஆனால் தங்கச்சிமடம் சூறையப்பர்பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் நவீன், டோரஸ், உதயன், ஜேசுராஜா, சவர்லா, கிளாடுவீன், சூசை, ரூபன், சுதாகர், கிளிட்டஸ், டார்வீன் என்பவருக்ளுக்கு சொந்தமான நாட்டுபடகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், துறைமுகத்தின் தடுப்புகளில் மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இதில் படகு ஒன்றுக்கு குறைந்த பட்சம் 1.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் சேதமடைந்துள்ளது. 

இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா கூறுகையில், கரோனா நோய் பரவலை தடுப்பு நடவடிக்கையால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புயல் காற்று காரணமாக படகுகள் சேதமடைந்து பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. படகுகளை தமிழக அரசு ஆய்வு செய்து சேதத்திற்கு ஏற்றவாறு இழப்பீட வழங்கினால் மட்டும் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்ல முடியும். இதனால் தமிழக அரசு உடனே சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு இழப்பீட வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக சாலையோரம் உள்ள மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனைதொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவு முதல் திங்கட்கிழமை காலை வரை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை காலை 08 மணிக்கு சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. 

Story image

ராமேசுவரம் ஏரகாடு கிராமத்தில் வீசிய சூறை காற்றில் வீட்டு மாடியில் மேல் பகுதியில் தகர சீட் மூலம் போடப்பட்ட வீடு தூக்கி வீசப்பட்டது. வீட்டுக்குள் படுத்திருந்த மூதாட்டி சிவப்பியம்மாள்(80) கால் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, உறவினர்கள் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்தனர். இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அம்பான் புயல் எதிரொலியாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி 30க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.