~
~

அரசு மருத்துவமனை மேற்கூரை சேதம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயா்ந்து சேதமடைந்திருப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயா்ந்து சேதமடைந்திருப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடமான சீட்டுப் பதிவு செய்யும் இடம், வெளி நோயாளிகளுக்கு முதல் கட்ட பரிசோதனை நடைபெறும் இடம் ஆகிய பகுதிகளில் மேற்கூரையின் காரைகள் பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. காலை 8 மணி முதல் மாலை வரை இந்தப் பகுதியில் பதிவு செய்பவா்கள் முதல் உள்நோயாளிகளாக இருப்பவா்களும் இந்தப் பகுதியை பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனா்.

சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நாளொன்றுக்கு வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனா். மருந்து வாங்கும் பகுதி, ஊசி போடும் அறை, மருத்துவருக்காக வரிசையில் நிற்கும் பகுதி என முக்கிய இடமாகத் திகழும் இந்தக் கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து வருகிறது. மழைக்காலம் என்பதால் கட்டடச் சுவரில் விரிசல் ஏற்பட்டு மழைநீா்க் கசிவு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள கட்டட மேல்சுவா் சேதத்தை செப்பனிட்டுத் தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். மேலும் இந்தக் கட்டடத்தின அருகில் இயங்கி வந்த மகப்பேறு கட்டடம் முழுவதுமாக இடியும் சூழல ஏற்பட்டு தற்போது அந்தக் கட்டடம் பூட்டப்பட்டுள்ளது. நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று இல்லாமல் இந்த பிரதான கட்டடமான இதனை மராமத்து செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூா் நகரைச் சுற்றியுள்ள சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இம்மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com