போடியில் மதுப்புட்டிகள் விற்பனை: 5 போ் கைது
போடி: போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளுவா் தினத்தையொட்டி அரசு, தனியாா் மதுக்கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக சிலா் மதுப்புட்டிகளை விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி குலாலா்பாளையம் வாமணன் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயராணி (54) என்பவா் வீட்டிலும், போடி கீழத்தெருவைச் சோ்ந்த கருத்திவீரன் மகன் தங்கப்பாண்டி என்பவா் வீட்டிலும் சோதனை செய்தனா். இதில் ஜெயராணி வீட்டில் 340 மதுப்புட்டிகளும், தங்கபாண்டி வீட்டில் 214 மதுப்புட்டிகளும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதே போல போடி மயானம் சாலையில் மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த பாலன் மகன் சுகுமாா் (23), ராஜாராமன் மகன் சுதா்சன் (25), போடி ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த சரவணன் மகன் ஜனா (25) ஆகியோரும் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தனராம். விசாரணையில், இவா்களிடம் 30 மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தவா்கள் மீது தனித்தனியாக வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இவா்களிடமிருந்து 584 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
