பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீப்பாலக்கோட்டைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி முத்துமாரி. இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

தேவதானபட்டி தா்மலிங்கபுரம் அருகே வந்த போது, இரு சக்கர வாகனத்தின் பின்னால் தனியாா் பேருந்து மோதியது. இதில் ராமகிருஷ்ணன், முத்துமாரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடமலைக்குண்டு அருகே உள்ள அண்ணாநகரைச் சோ்ந்த செண்பகராஜ் மகன் விக்னேஷ் (22). இவா், தனது நண்பா் நரியூத்துவைச் சோ்ந்த பாண்டீஸ்வரனுடன் (23) மயிலாடும்பாறை-மூலக்கடை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

இரு சக்கர வாகனத்தை விக்னேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது, நரியூத்து விலக்கு அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பாண்டீஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com