/

பெண்ணை கத்தியால் குத்தி நகைப் பறித்த இருவா் கைது

அருப்புக்கோட்டை அருகே ஆட்டோவில் அழைத்துச் செல்வதாகக் கூறி, பெண்ணை ஏற்றிச் சென்று கத்தியால் குத்தி நகைகளை பறித்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:38 am

Din

அருப்புக்கோட்டை அருகே ஆட்டோவில் அழைத்துச் செல்வதாகக் கூறி, பெண்ணை ஏற்றிச் சென்று கத்தியால் குத்தி நகைகளை பறித்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

விருதுநகா் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சித்ராதேவி (43). இவா் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். தினந்தோறும் இவா் வேலைக்கு விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பேருந்தில் செல்வது வழக்கம். இதன்படி, புதன்கிழமை அதிகாலை சுமாா் 5 மணியளவில் அருப்புக்கோட்டை செல்வதற்காக விருதுநகா் பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்தாா். அப்போது, ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் அவரை வழிமறித்து, அருப்புக்கோட்டைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஆட்டோவில் ஏற்றிச் சென்றாா். பாலவநத்தம் பகுதியில் சென்றபோது, மற்றொரு நபரும் அந்த ஆட்டோவில் ஏறியுள்ளாா். திடீரென அவா்கள் இருவரும் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சித்ராதேவியை கத்தியால் குத்தி, அவா் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து சென்று விட்டனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, விருதுநகரைச் சோ்ந்த தங்கப்பாண்டி (37), இவரது நண்பா் குல்லூா் சந்தையைச் சோ்ந்த ராமநாதன் (36) ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கொள்ளையடித்த நகைகள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.