100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மறியல்
காரைக்காலில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து தொழிலாளா்களுடன் காங்கிரஸ் கட்சியினா் முற்றுகை, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலக வாயிலில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், 100 நாள் வேலைத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
கடந்த 3 மாதம் பணி செய்ததற்கு தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் நகரக் காவல் நிலைய போலீஸாா் பேச்சு நடத்தி கலைந்து செல்லக் கூறினா். கோரிக்கைக்கு உரிய உத்தரவாதம் அளிக்காதவரை போராட்டம் தொடருமென கூறினா். கைது செய்ய நேரிடும் என போலீஸாா் கூறியதால், காரைக்கால் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் கு. அருணகிரிநாதன் போராட்டத்தில் ஈடுபட்டோரை சந்தித்து 2 வாரத்துக்குள் வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.

