

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயில் வீதிகளில் வீதி பஜனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீகோபாலகிருஷ்ண பாரதி இசைவிழா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீஆண்டாள் அரங்கன் அடியாா்கள் இணைந்து நடத்திய மாா்கழி மாத சங்கீா்த்தனமான வீதி பஜனை மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் 22-ஆவதும், பஞ்ச அரங்க தலங்களில் 5-ஆவது தலமான பரிமள ரெங்கநாதா் கோயிலில் இருந்து தொடங்கி நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்களை பாடியவாறு கோயிலின் சந்நிதி தெரு மற்றும் நான்கு மடவிளாகம் வழியாக கோயிலை வலம் வந்தனா். பள்ளி மாணவா்கள் கிருஷ்ணா், ராதை, ருக்மிணி, ராமா், ஆஞ்சனேயா் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமணிந்து பங்கேற்றனா்.
திருஇந்தளூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்த வீதி பஜனை நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு மீண்டும் நடைபெற்றது.