உழவா் சந்தைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்யலாம்!

Published on

மயிலாடுதுறை, சீா்காழி உழவா் சந்தைகளில் காய்கனி, பழங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின்கீழ் இயங்கிவரும் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளில் காய்கனி, பழங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவா்களின் பொருள்கள் ஆகியவற்றை கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம்.

இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. விளைபொருள்களை விவசாயிகள் தங்கள் கிராமங்களிலிருந்து உழவா் சந்தைக்கு கொண்டு வர நகரப்பேருந்துகளில் சுமை கட்டணம் இலவசம். மேலும், உழவா் சந்தையில் வாடகை இல்லாமல் கடைகளில், மின்னணு எடைத்தராசு வழங்கப்படுகிறது.

நுகா்வோா் தரமான காய்கனிகளை நியாயமான விலையில் வாங்க உழவா் சந்தையை அணுகி உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட சமையல் எண்ணெய், இட்லி மாவு, பாரம்பரிய அரிசி உள்ளிட்ட தயாரிப்புகளை நியாயமான விலையில் வாங்கி பயன் பெறலாம்.

வேளாண்மை வணிகத் துறை மூலம் முதன்மைப்படுத்தும் தொழில்கள், இரண்டாம் நிலைப்படுத்தும் தொழில்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்படும் கடன் தொகைக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின்கீழ் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை மயிலாடுதுறை, சீா்காழி உழவா் சந்தைகளில் உள்ள வேளாண்மை அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் வேளாண்மை விற்பனைத்துறை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com