நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உத்ஸவப் பெருவிழாவையொட்டி, வெள்ளிப்படிச் சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு புதன்கிழமை நடைபெற்றது.
மயூரநாதர் கோயில் துலா உத்ஸவப் பெருவிழா கடந்த அக். 18-ஆம் தேதி துலா மாத பிறப்புத் தீர்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் 30 நாள்கள் நடைபெறும் இவ்விழா நாள்களில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை. கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய நதிகள் எல்லாம் இந்த மாதத்தில் துலாக்கட்ட காவிரியில் நீராடி புனிதம் பெற்றதாக ஐதீகம்.
இவ்விழாவானது ஒரு மாதம் நடைபெற்றாலும், கடைசி 10 நாள்களில் நடைபெறும் விழா நாள்களில் அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதையொட்டி, 10 நாள்களும் மயூரநாதர் பஞ்சமூர்த்திகளுடன் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
மயூரநாதர் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளும்போது பக்தர்கள் திரளானோர் பங்கேற்று, புனித நீராடி மயூரநாதரை வழிபடுவர். துலா உத்ஸவத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வெள்ளிப்படிச் சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை நேர நிகழ்வாக கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளிப்படிச் சட்டத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி புறப்பாடும், பிற்பகல் 1 மணியளவில் மயூரநாதர் துலாக்கட்ட காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் நாற்காலி மஞ்சத்தில் புறப்பாடு மற்றும் திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளில், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் எஸ். குருமூர்த்தி, சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர், முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.