மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவிழந்தூர்அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை அருள்மிகு வதான்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வதான்யேஸ்வரர் சுவாமி கோயில் துலா உத்ஸவ விழா, தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் அருளாசியுடன் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக, துலா உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அருள்மிகு வதான்யேஸ்வரர், அருள்மிகு ஞானாம்பிகை திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 11 மணியளவில் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளல் செய்யும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கோயில் முன்பு மாலை 4 மணியளவில் தொடங்கிய தேரோட்டம், நான்கு வீதிகள் வழியாக சென்று இரவு 7.30 மணியவில் நிலையை அடைந்தது.
இதில், கோயில் கண்காணிப்பாளர் நடராஜன், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எம். திருநாவுக்கரசு, ஆன்மீகப் பற்றாளர்கள் எஸ். சீத்தாராமன், ஏ. அப்பர் சுந்தரம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.