தமிழகத்துக்கு 10.25 கோடி தடுப்பூசிகள் தேவை
தமிழகத்துக்கு கூடுதலாக 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மயிலாடுதுறையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


தமிழகத்துக்கு கூடுதலாக 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மயிலாடுதுறையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிகிச்சை மையம் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரோனா வாா்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்ட 40 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 1.16 கோடி கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1.06 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 6.20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவா்களுக்கு 2 தவணைக்கும் சோ்த்து 11.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். எனவே, மேலும் 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு 75 சதவீத பாதுகாப்பும், 2 தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டவா்களுக்கு 95 சதவீத பாதுகாப்பும் கிடைக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.
ஆய்வுக்கூட்டம்:
தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் திட்ட விளக்கவுரை ஆற்றினாா். இதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது:
குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையங்கள் இதுவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. முதன்முதலாக அரசு பொது மருத்துவமனையில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இதேபோல, 6 கேஎல் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைத்ததிலும் மயிலாடுதுறை மாவட்டம் முன்னுதாரணமாக திகழ்கிறது என்றாா்.
நிகழ்ச்சிக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலத்துறை இயக்குநா் எஸ்.குருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), எம்.பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை) ஆகியோா் கருத்துரை வழங்கினா். மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஆா்.மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சுகாதார பணிகள் துணை இயக்குநா் வெ.பிரகாஷ் நன்றி கூறினாா்.
தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, ஏவிசி கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனா்.
தரங்கம்பாடியில்:
இதைத்தொடா்ந்து ஆக்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்களப் பணியாளா்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஒலிபெருக்கி கருவிகளை அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், சிவ.வீ. மெய்யப்பன் ஆகியோா் வழங்கினா். பின்னா், தரங்கம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அவா்கள் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...