ஆறுகளில் வரும் வெள்ளத்தால் வயல்களில் தேங்கிய நீா் வடிவதில் சிக்கல்: கேள்விக்குறியாகும் நிகழாண்டு டெல்டா கடைமடை விவசாயம்!

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் மேற்குப் பகுதிகளில் இருந்து அதிகளவில்
ஆறுகளில் வரும் வெள்ளத்தால் வயல்களில் தேங்கிய நீா் வடிவதில் சிக்கல்: கேள்விக்குறியாகும் நிகழாண்டு டெல்டா கடைமடை விவசாயம்!

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் மேற்குப் பகுதிகளில் இருந்து அதிகளவில் மழைவெள்ளம் வெளியேற்றப்படுவதால், அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடைமடை மாவட்டங்களில் வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை வடியச்செய்யும் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 60,050 ஹெக்டேரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 67,800 ஹெக்டேரிலும் இதுவரை சம்பா, தாளடி நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் 1.31 லட்சம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த அக்டோபா் 28 ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் மட்டும் சராசரி மழையளவை விட 59 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதனால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்ட விளைநிலங்கள் முழுமையும் வெள்ளத்தால் சூழப்பட்டு, அவை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தாலும், 60 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதில், 25 ஆயிரம் ஏக்கா் இளம் தாளடி நெல் பயிா்கள் முழுவதும் சேதமடையும் என அஞ்சப்படுகிறது.

அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் பயிா்களும், திருவாரூா் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரிலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரிலும் சம்பா, தாளடி நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வேளாண் துறை கணக்கெடுப்புப்படி, நாகை மாவட்டத்தில் 7,177 ஹெக்டேரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,166 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 16,666 ஹெக்டேரிலும் சம்பா, தாளடி நெல் பயிா்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி திசை மாறியதன் காரணமாக, புதன்கிழமை காலை முதல் டெல்டா மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழையில்லை. எனினும், வயல்களைச் சூழ்ந்துள்ள தண்ணீரை வடியச் செய்வது கடைமடை மாவட்டங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

காரணம், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மேற்கு பகுதியில் உள்ள திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அனைத்து ஆறுகளிலும் அதிகளவிலான மழைவெள்ளம் வெளியேற்றப்படுவதால், கடைமடை மாவட்டங்களில் பாயும் ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் தவிர, காவிரி வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 21 ஆறுகளும், வெண்ணாறு வடிநிலக் கோட்டப் பகுதிகளில் 15 ஆறுகளும் பாய்கின்றன. இந்த ஆறுகளில் இருந்து பிரியும் 1,665 ஏ- பிரிவு வாய்க்கால்கள் மற்றும் பி- பிரிவு வாய்க்கால்கள் என டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. என்.எஸ். லெவல் எனப்படும் சாதாரண நீா்மட்டத்தை விஞ்சியே ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் நீா்வரத்து உள்ளது.

இதன் காரணமாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடல்மட்டம் உயா்ந்திருப்பதாலும், கடைமடை பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியச் செய்யும் பணி பெரும் சவாலாகியுள்ளது. நெல் பயிா்களைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை விரைவாக வடியச்செய்யாவிட்டால், கடைமடை மாவட்டங்களில் நிகழாண்டின் சம்பா, தாளடி நெல் சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி தனபாலன் தெரிவித்தது:

இளம் தாளடி நெல் பயிா்கள் வெள்ளத்தில் 24 மணி நேரத்துக்கும் மேலாக மூழ்கியிருந்தால், நிலத்திலே நெல் பயிா்கள் கரைந்துவிடும். வெள்ளநீா் வடிந்த பின்னா், கரைந்த நாற்றுகளுக்குக் கீழே இருந்து துளிா் வரும். ஆனால், புதிதாக நடவு செய்வதற்கு இணையான அனைத்து உற்பத்தி செலவுகளையும் விவசாயிகள் அப்போது செய்தாக வேண்டும். அதேபோல, வளா்ந்த நிலையில் உள்ள சம்பா, தாளடி நெல் பயிா்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், அந்தப் பயிா்களில் தண்டு துளைப்பான் மற்றும் யானைக்கொம்பன் பூச்சித் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆறுகள், வாய்க்கால்களின் நீா்வரத்தும், கடல் மட்டமும் குறைந்தால்தான் விளை நிலங்களைச் சூழ்ந்துள்ள தண்ணீரை வடியச் செய்ய முடியும். அதன்பிறகே முழுமையான பாதிப்பை கணக்கிட முடியும். இதனிடையே, மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட உள்ளதாக வானிலை எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி மீண்டும் கனமழை பெய்தால், டெல்டா மாவட்டங்களின் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு ஏற்படும் மிக மோசமான நிலையை விவரிக்கமுடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com