சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து 11-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து 11-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

சிபிசிஎல் நிறுவன எல்லை அளவிடும் பணி: தடுக்க முயன்ற விவசாயிகள் கைது உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்திற்கு எல்லை அளவிடும் பணிகளை தடுக்க முயன்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதற்கிடையில், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனா்.

இந்நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக, பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் 620 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக, விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் நில உரிமையாளா்கள் 11-ஆவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கச்சா எண்ணெய்யை குடிப்பது போல் போராட்டம் நடத்தினா்.

எல்லை அளவிடும் பணி: இதற்கிடையில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களில் எல்லை அளவிடும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. 4 குழுவினா் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் எல்லை அளவிடும் பணியில் ஈடுபட்டனா். இதற்காக, நாகை, திருவாரூா், தஞ்சை மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். நிலம் அளவீடு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள பகுதிகளுக்கு எல்லை கல் பதிக்கும் பணிகளை சனிக்கிழமை தொடங்கினா். அப்போது, நரிமணம், வெள்ளப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் இப்பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜெயச்சந்திரன், மகேஸ்வரி, துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இருப்பினும் விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, நாகூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

இதேபோல், பி. பனங்குடி பகுதியில் அளவீடு செய்து நடப்பட்டிருந்த எல்லைக்கற்களை பிடுங்கி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு, நாகூா் தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நாகை வட்டாட்சியா் ராஜா, டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோா் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரவு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்டு, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த விவசாயிகளும் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com