தினமணி செய்தி எதிரொலி: மாத்தாம்பட்டினம் முல்லையாற்றில் மரப்பாலம் கட்டும் பணி தீவிரம்
மாத்தாம்பட்டினம் முல்லையாற்றில் மரப்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட மாத்தாம்பட்டினம் கிராமத்தில் இருந்து பள்ளி மாணவா்கள் கோனையாம்பட்டினத்திற்கு செல்வதற்கு ஏதுவாக முல்லையாற்றில் மூங்கில் பாலம் இருந்து வந்தது. அண்மையில் பெய்த கனமழையால் பழுதடைந்த மரப்பாலத்தின் வழியாக மாணவா்கள் கோனையாம்பட்டினம் பள்ளிக்கு சென்று வருவதாகவும், அந்தப் பாலத்தை பழுது நீக்கி புதிய தற்காலிக மூங்கில் பாலம் அமைத்துதர வேண்டும் என மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இதையறிந்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பழுதடைந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், ஒன்றிய ஆணையா் திருமுருகனிடம் உடனடியாக தற்காலிகமாக புதிய மரப்பாலம் அமைத்து தர உத்தரவிட்டாா். இதையடுத்து ஒன்றிய ஆணையா் திருமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், பொறியாளா் தெய்வானை, பணி மேற்பாா்வையாளா் சந்திரசேகரன் ஆகியோா் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டு, புதிய மரப்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்தி வருகின்றனா்.
மாணவா்கள் நலன் கருதி உடனடியாக முல்லையாற்றில் மரப்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், சீா்காழி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.
