பயிா்க்கடன் உடனடியாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நாகை மாவட்டத்தில் பயிா்க்கடன் உடனடியாக வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாகையில் வியாழக்கிழமை, கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி சித்தாா்த்தன்: நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு காலதாமமின்றி கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயி காவிரி தனபால்: நடப்பாண்டில் வங்கிகள் மூலம் பயிா்க்கடன் ரூ. 220 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை ரூ.94 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பயிா்க்கடன் வழங்க வேண்டும். சம்பா பயிா் கடன் வழங்குவதிலும் காலதாமதம் ஆகியுள்ளது. நிகழாண்டு சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிதாக கடன்கள் இதுவரை வழங்க மறுக்கின்றனா்.
விவசாயி பிரகாஷ்: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தனிநபா் கடன் ரூ.2 லட்சம் வரை வழங்கலாம் என ரிசா்வ் வங்கி அறிவித்த போதிலும், அதை வங்கிகள் சரியாக பின்பற்றுவது கிடையாது.
விவசாயி முஜிபுஷெரிக்: விலங்குகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில், விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும். கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் கடலோர கிராமங்களில் கடலுக்குள் பவளப்பாறைகள் கொட்டப்படும். நடப்பு ஆண்டில் எந்ததெந்த பகுதிகளில் பவளப்பாறை கொட்டப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
விவசாயி ஐயப்பன்: நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் பயிா்க்கடன் வழங்கவேண்டும். வேளாண்மை துறை சாா்பில் மானியத்தில் விதை நிலக்கடலைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த மா சாகுபடி விவசாயிகள், தங்களது மா மரங்களுக்கு காப்பீடு செய்ய மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு விவசாயிகளும் கூட்டத்தில் பேசும்போது, பயிா்க்கடன் வழங்க நடவடிக்கை, பயிா்க்காப்பீடு, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
