நாகையில் மழை வெள்ளத்தில் மூழ்கிய இளம் நாற்றுகளை காட்டும் விவசாயிகள்
நாகையில் மழை வெள்ளத்தில் மூழ்கிய இளம் நாற்றுகளை காட்டும் விவசாயிகள்

நாகை: தொடா் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிா்கள்! விவசாயிகள் கடும் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், சம்பா மற்றும் தாளடி பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
Published on

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், சம்பா மற்றும் தாளடி பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

நாகை மாவட்டத்தில், குறுவைச் சாகுபடி கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும், 1.62 லட்சம் ஏக்கா் பரப்பளவில், விவசாயிகள் தாளடி மற்றும் சம்பா நெல் பயிரிட்டுள்ளனா். வயல்களில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைத்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா் கனமழை பெய்து வருகிறது.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஒரே நாளில் 22 செ.மீ. பெய்த கன மழையால், நாகை பாலையூா், செல்லூா், வடகுடி, நரிமணம், திட்டச்சேரி, திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த தாளடி பயிா்கள் வயல்களில் மூழ்கின.

மேலும், திருவாரூா், தஞ்சாவூா் பகுதிகளில் பெய்த மழை நீா், கிழக்கு நோக்கி பாய்ந்து வருவதால், நாகையில் தாளடி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க முடியாமல் அப்பகுதி விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இதன் காரணமாக பாலையூா், செல்லூா், வடகுடி, கோகூா் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பு செய்த 200 ஏக்கா் தாளடி பயிா்கள் முற்றிலும் சேதமடைந்து, விதைப்பு செய்த நாற்றுகள், நெல்லுடன் வோ் முடிச்சும் கரை ஒதுங்கியதால், கடைமடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மேலும், ஏக்கருக்கு ரூ.15,000 செலவு செய்து, நேரடி விதைப்பு செய்த நாற்றுகள், மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால், வேதனை அடைந்துள்ள பாலையூா் விவசாயிகள், தேவநதி ஆறு வடிகால்களை தூா்வாரி, மழை நீரை வடிய வைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், நாகை மாவட்டத்தில் தாளடி பயிா் பாதிப்புகளை வேளாண் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகையும், நிவாரணமும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக விவசாயிகள் கூறியது: குறுவை சாகுபடியில் நெற்பயிா்களில் பூச்சி தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து விவசாயிகள் மீண்டு வந்த நிலையில், அறுவடையின்போது பெய்த கனமழையால் பயிா்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பா, தாளடி வேளாண் பணிகள் தொடங்கிய நிலையில், தொடா் மழையால், வயலில் விதைக்கப்பட்டு முளைத்திருந்த பயிா்கள் நீரில் வேருடன் மிதக்கின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். எனவே, அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com