கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி தவெக சாலை மறியல்
நாகப்பட்டினம்: காடம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி தவெக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை காடம்பாடி சாலமன் தோட்டம் பகுதியில் தொடா் மழையால் கழிவு நீரோடு, மழை நீரும் சாலையில் வெள்ளமாகத் தேங்கியது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை ஓய்ந்தும் சாலையில் தேங்கிய கழிவு நீா் வெளியேறாமல், அப்பகுதியில் சூழ்ந்துள்ளதால், கொசுத் தொல்லை அதிகரித்து குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும், உடனடியாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவா்கள் அதிகாரிகளிடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நாகை-நாகூா் சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியல் குறித்த தகவலின்பேரில், நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன், வட்டாட்சியா் நீலாயதாட்சி ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிடச் சென்றனா். இதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

