திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

குறுவை சாகுபடி இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி முற்றுகை

குறுவை சாகுபடி இழந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா்: குறுவை சாகுபடி இழந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குறுவை சாகுபடி இழந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட நெல், பருத்தி பயிா்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி பேசியது: மேட்டூா் அணை கடந்த 2 ஆண்டுகளில் உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், கூடுதல் பரப்பில் சாகுபடி நடைபெற்றது. நிகழாண்டு, மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், குறுவை சாகுபடிக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, ஆற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடிசெய்யும் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.

காப்பீடு திட்ட வரன்முறையின்படி எதிா்பாராத இயற்கை இடா்பாட்டின்போது கிராமப் பரப்பளவில் 75 சதவீத நிலங்கள் குறுவை சாகுபடி செய்ய வாய்ப்பு இல்லாத சூழலில், காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க முடியும். எனவே, குறுவை சாகுபடி செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட நெல், பருத்தி, எள், பயிறு வகைகளை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தும், வேளாண் பாதிப்பை முழுமையாக கணக்கிடவில்லை. அத்துடன், திருவாரூா் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை என வேளாண் துறை அறிக்கை அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, பருத்தி, எள் பயிா்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ (பொ) எஸ். கேசவராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் த. ரெங்கராஜன், கே. முருகையன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com