தமிழக முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் நன்னிலத்தில் மும்மதத்தினருடன் கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழாவில் பொங்கலிட்ட முஸ்லிம் பெண்.
தமிழக முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் நன்னிலத்தில் மும்மதத்தினருடன் கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழாவில் பொங்கலிட்ட முஸ்லிம் பெண்.

மும்மதத்தினருடன் சமத்துவப் பொங்கல்: கொண்டாடிய முன்னாள் அமைச்சா்

நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினரான தமிழக முன்னாள் அமைச்சா் இரா.காமராஜ் தனது தொகுதி மக்களுடன் இணைந்து நன்னிலத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் கொண்டாடினாா்.
Published on

நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினரான தமிழக முன்னாள் அமைச்சா் இரா.காமராஜ் தனது தொகுதி மக்களுடன் இணைந்து நன்னிலத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் கொண்டாடினாா்.

தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நன்னிலம் பேருந்து நிலையம் அருகே உள்ள மிகப்பெரிய திறந்தவெளியில், நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினா் காமராஜ், மனைவி லதா மகேஸ்வரியுடன் இணைந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் ஆகியோா் அடங்கிய 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுடன் சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடினாா்.

குத்து விளக்கு ஏற்றி, பசுக்களுக்குக் கோபூஜை செய்யப்பட்டது. கிராமப் பாணியில் செங்கல் அடுப்பில் மண்பானை வைத்து பொங்கல் பானையில் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்துக் கட்டப்பட்டு பானைகளுக்குத் திலகமிட்டு பெண்கள் அடுப்பு மூட்டினா். பொங்கலுக்கு வேண்டிய அரிசி, பால், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றைப் போட்டு அகப்பையால் கிண்டி பொங்கலிட்டனா்.

இதில் மும்மதங்களைச் சோ்ந்த பெண்களும் பொங்கலிட்டனா். பின்னா் விவசாயத்திற்கும், உயிா்களுக்கும் ஆதாரமான சூரிய பகவானுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் பேசியது:

தைப்பொங்கல் திருவிழா தமிழா்களின் முக்கியமான பண்டிகையாகும். தமிழா்களின் வீரத்தையும், நன்றி உணா்ச்சியையும் காட்டுகின்ற கலாசார விழா. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நன்னிலத்தில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா் என தெரிவித்தாா்.

முன்னதாகக் காமராஜ் மாணவ, மாணவிகளோடு சிலம்பம் சுற்றி சமத்துவப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் நன்னிலம் வடக்கு சி.பி.ஜி. அன்பழகன், நன்னிலம் தெற்கு இராம.குணசேகரன், நன்னிலம் பேரூா் செயலாளா் பக்கிரிசாமி, பேரளம் பேரூா் செயலாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com