நொய்டாவில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன

தேசியத் தலைநகர் வலயப் பகுதியான நொய்டாவில் சுதந்திர தின நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும்,
Published on
Updated on
2 min read

தேசியத் தலைநகர் வலயப் பகுதியான நொய்டாவில் சுதந்திர தின நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் மரக்கன்று நடும் இயக்கத்தில் பங்கேற்றதாகவும் நொய்டா ஆணையத்தின் பொது மேலாளர் ராஜீவ் தியாகி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உத்தர பிரதேச அரசின் காடு வளர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சுதந்திர தின நாளான புதன்கிழமை மட்டும் நொய்டா பகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 918 மரக்கன்றுகள் நடப்பட்டன. காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு ஏழு மணி வரை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 9 கோடி மரக்கன்றுள் நடுவதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதில் நொய்டா பகுதியில் மட்டும் 86,725 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் விஞ்சி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 
நொய்டா நகரம் உருவாக்கப்பட்ட 42 ஆண்டுகளில் இது போன்று மிகப் பெரிய அளவில் மரக்கன்றுகள் நடும் இயக்கம் மேற்கொள்ளப்படவில்லை. ஓராண்டில் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு 4 லட்சமாகும். தற்போது அதில் 23 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. புளி, வேம்பு, அசோகா, நெல்லி, சம்பா, பிகான், பீப்பள், ஜாமூன், கடம்பா, பெல், ஜகரான்டா, எரிக்கா பாம், லில்லி ஆகிய இனங்களின் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த வகை மர இனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மாசுவைக் குறைக்க உதவுவதாகவும் உள்ளன. மேலும், இந்த வகை மரங்களின் கிளைகள் நீண்ட காலம் வாழ்நாள் உடையதாகும். இதனால், மனிதர்களும், விலங்குகளும் இவற்றின் பழங்கள், மலர்கள், மூலிகைகள் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
நொய்டாவில் உள்ள செக்டார்கள் 15, 22, 27, 44, 56, 58, 61, 62, 63, 64, 72, 74, 112, 115, 120, 121, 122, 123, 137, 144, 145, 150, 151, 156, 166, 167 ஆகிய இடங்களிலும், நொய்டா- கிரேட்டர் நொய்டா விரைவுச் சாலை நெடுகிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன என்றார் ராஜீவ் தியாகி.
நொய்டா செக்டார் 22-இல் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நடும் நிகழ்ச்சியில் உத்தர பிரதேச உள்கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலர் ஆர்.கே. சிங் பங்கேற்றார். இதில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நாவற்பழ மரக்கன்று உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகளை நட்டனர். அதேபோன்று, செக்டார் 44-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், கௌதம் புத் நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் மகேஷ் சர்மா கலந்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் குடியிருப்பு நலச் சங்கங்கள், ரோட்டரி கிளப், வர்த்தக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நொய்டா ஊழியர் நலச் சங்கம், நொய்டா தொழில் சங்கம், தோட்டக்கலைத் துறை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.