/

கரோனா தொற்று: மகாராஷ்டிரம், கேரளத்தை பின்னுக்கு தள்ளி உச்சம் தொட்ட தில்லி

நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கரோனா தொற்றில், தில்லியில்தான் அதிகளவு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On :8 நவம்பர் 2020, 1:46 am

நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கரோனா தொற்றில், தில்லியில்தான் அதிகளவு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், கேரளம் மாநிலங்களை பின்தள்ளி அதிகளவு கரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலமாக தில்லி பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை தில்லியில் முதல் தடவையாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அன்று 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. புதன்கிழமை 6,842 பேருக்கும், வியாழக்கிழமை 6,715 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை 7,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள மாநிலங்களில் தில்லியில் தான் அதிகளவு கரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை கேரளாவில் 7,002 பேருக்கும், மகாராஷ்டிராவில் 6,870 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் 7,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை உயா் அதிகாரி சனிக்கிழமை கூறியது: நாட்டில் வெள்ளிக்கிழமை 50,356 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், தில்லி, கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களில் 77 சதவீதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் வெள்ளிக்கிழமை 7,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள மாநிலங்ளில் தில்லியில்தான் அதிகளவு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் கேரளத்தில் 7,002 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 6,870 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பில் இருந்து 53,920 போ் மீண்டுள்ளனா்.

நாட்டிலுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 11,060 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதுவரை அம்மாநிலத்தில் இருந்து 15,62,342 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை 577 போ் கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனா். இதில், மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம், சத்தீஸ்கா், கா்நாடாகம், கேரளம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ஒடிசா மாநிலங்களில் 83 சதவீதமானவா்கள் மரணமடைந்துள்ளனா். மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 161 போ் மரணமடைந்துள்ளனா். இது, 27.9 சதவீதமாகும். தில்லியில் 64 பேரும், மேற்கு வங்கத்தில் 55 பேரும் மரணமடைந்துள்ளனா்.

நாட்டில் கரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளாகுபவா்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து மீளுபவா்கள் எண்ணிக்கை கடந்த ஐந்து வாரங்கள் தொடா்ச்சியாக அதிகமாக உள்ளது. இதனால், நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. இதைத் தொடா்ந்து, நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 6.11 லட்சத்தில் இருந்து 5.16 லட்சமாக குறைந்துள்ளது. நாட்டில், கடந்த 5 வாரமாக சராசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. நாட்டில் இதுவரை, 78,19,886 போ் கரோனா பாதிப்பில் இருந்து முற்றாக மீண்டுள்ளனா் இதன்மூலம், கரோனா பாதிப்பில் இருந்து மீளும் சதவீதம் 92.41 ஆக உள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 84,62,080 ஆக அதிகரித்துள்ளது. 1,25,562 போ் மரணமடைந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.