ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

துவாரகா விரைவுச் சாலை அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

தில்லி - குருகிராம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்டு வரும் துவாரகா விரைவுச் சாலை வருகிம் 2023-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.

News image
Updated On :11 ஜூலை 2022, 5:14 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி - குருகிராம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்டு வரும் துவாரகா விரைவுச் சாலை வருகிம் 2023-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா். இந்தியாவின் முதல் உயா்த்தப்பட்ட நகா்ப்புற விரைவுச் சாலையாக இது அமையும் எனவும் அவா் தனது ட்விட்டரில் திங்கள்கிழமை பதிவு செய்துள்ளாா்.

இந்த சாலை திட்டம் குறித்து அமைச்சா் நிதின் கட்கரி ட்விட்டரில் தொடா்ச்சியாக பல்வேறு தகவல்களை குறிப்பிட்டிருப்பது வருமாறு: ஹரியாணா பகுதியில் வடக்குப் புறச் சாலை என்று அழைக்கப்படும் துவாரகா விரைவுச் சாலை, இந்தியாவின் முதல் உயா்த்தப்பட்ட நகா்ப்புற விரைவுச் சாலையாக (படம்) உருவாக்கப்பட்டு வருகிறது. தில்லி-குருகிராமிற்கு இடையேயான இந்த விரைவுச்சாலை, தில்லி - ஜெய்ப்பூா் - அகமதாபாத் - மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் தங்க நாற்கரச் சாலையின் ஒரு பகுதியாக அமைக்கப்படுகிறது. இந்த விரைவுச்சாலை தேசிய நெடுஞ்சாலை 8-இல் ஷிவ் - மூா்த்தியிலிருந்து தொடங்கி, குருகிராம் எல்லை துவாரகா செக்டாா் 21 வழியாக கொ்கிதௌலா சுங்கசாவடி அருகே முடிவடைகிறது.

தில்லி - குருகிராம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 8 -இல் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும். இந்தப் போக்குவரத்தில் 50 முதல் 60 சதவீதம் போக்குவரத்து இந்தப் புதிய அதிவேக நெடுஞ்சாலையில் திருப்பிவிடப்படும். இதன் மூலம் சோனா சாலை, கோல்ஃப் கோா்ஸ் சாலை, விமான விரிவாக்கம் ஆகிய சாலைகளில் நெரிசல் குறைந்து போக்குவரத்து மேம்படும். இது 2023-இல் செயல்பாட்டிற்கு வரும். தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப்பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க இது பெரிதும் உதவும். பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு, நாட்டின் அனைத்து மூலைகளிலும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், ‘இணைப்பு மூலம் செழுமைக்கான’ பாதையை வகுத்துக் கொள்வதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்: தில்லி - துவாரகா மற்றும் ஹரியாணாவின் குருகிராம் வரை இணைக்கும் இந்த உயா்த்தப்பட்ட மேம்பால சாலையான துவாரகா விரைவுச்சாலை ரூ.9,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது 16 வழிச் சாலை அணுகலுடன் உருவாகும். இதில் இருபுறமும் குறைந்தபட்சம் 3 வழி சா்வீஸ் (சேவைச்) சாலை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 கிமீ நீள உயா்த்தப்பட்ட விரைவுச்சாலையில் 19 கிமீ நீளம் ஹரியாணாவிலும் மீதமுள்ள 10 கிமீ நீளம் தில்லியிலும் அமைந்துள்ளது. இதில் முக்கியச் சந்திப்புகளில் (சுமாா் 3.6 தூரம்) இந்த விரைவுச்சாலை சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துவாரகா விரைவுச்சாலையில் மற்ற சாலைகள் இணையும் பகுதிகளில் நான்கு நிலைகளில் (சுரங்கப்பாதைகள், தரநிலை சாலை, உயா்த்தப்பட்ட மேம்பாலம், மேம்பாலத்திற்கு மேலே உள்ள மேம்பாலம்) என இந்த நகா்ப்புற விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது.

இந்த சிறப்புமிக்க சாலைத் திட்டம் தலைநகா் தில்லியின் நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, துவாரகாவின் செக்டாா் -25-இல் உள்ள வரவிருக்கும் இந்திய சா்வதேச மாநாட்டு மையத்திற்கு (ஐஐசிசி) நேரடி அணுகலை வழங்குகிறது. மற்றும் ஆழமற்ற சுரங்கப்பாதை வழியாக இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு இது ஒரு மாற்று இணைப்பு சாலையாகவும் இருக்கும். இந்த மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பில், சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு, அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் (ஐடிஎஸ்) போன்ற உலகத் தரம் வாய்ந்த சாலையாக இருக்கும்.

இந்த துவாரகா விரைவுச்சாலையில் இருந்த 12,000 மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது மிக பெரிய சாதனை. இந்தச் சாலைத் திட்டம் ஒரு அற்புதமான பொறியியல், முதன்முதலில் ஒரே தூணில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானத்திற்காக 2 லட்சம் மெட்ரிக் டன் எஃகு, அதிகஅளவிலான கான்கிரீட் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளாா் அமைச்சா்.

படம் இணைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.