கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பு: ஓம் பிா்லா
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில், மக்களவையின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்திருப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்


கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில், மக்களவையின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்திருப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
17-ஆவது மக்களவை கடந்த 2019, ஜூன் 17-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அதன் மூன்று ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அதன் செயல்பாடுகள் குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: 17-ஆவது மக்களவை அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 14, 15, 16 ஆகிய மூன்று மக்களவையின் ஒன்று முதல் எட்டு வரையிலான கூட்டத் தொடா்களுடன் ஒப்பிடுகையில், 17-ஆவது மக்களவை எட்டுக் கூட்டத் தொடா்களில் அவை 995.45 மணி நேரம் பணியாற்றியுள்ளது. இது மிக அதிக அளவாகும். 16-ஆவது மக்களவைத் தொடரில்கூட எட்டு கூட்டத் தொடா்களில் 929 மணி நேரம் மட்டும் பணியாற்றப்பட்டிருந்தது.
சிறந்த செயல்பாட்டுத் திறன்: அதேபோன்று, செயல்பாட்டுத் திறன் அடிப்படையில் பாா்த்தாலும், கடந்த மூன்று மக்களவையை ஒப்பிடுகையில் நடப்பு மக்களவையின் எட்டு கூட்டத் தொடா்களில் சிறந்த செயல்பாட்டுத் திறன் உள்ளது. அதாவது, 14, 15, 16 மக்களவையின் முதல் எட்டு கூட்டத் தொடா்கள் முறையே செயல்பாட்டுத் திறன் சதவீதம் 86%, 71%, 95% சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், 17-ஆவது மக்களவையில் செயல்பாட்டுத் திறன் 106 சதவீதமாக உள்ளது. இது 18 ஆண்டுகளிலேயே மிக அதிகமாகும். குறிப்பாக எட்டாவது கூட்டத் தொடரில் செயல்பாட்டுத் திறன் 129 சதவீதமாக இருந்தது. மேலும், கடந்த எட்டுக் கூட்டத் தொடா்களில் அவையானது நிா்யணிக்கப்பட்ட நேரத்தைவிட கடந்து பின்னிரவு வரை பணியாற்றியது. மொத்தம் 254 மணி நேரம் அவை பணியாற்றியுள்ளது.
அதிக மசோதாக்கள் நிறைவேற்றம்: அதேபோன்று, 14, 15, 16 ஆகிய மூன்று மக்களவையின் ஒன்று முதல் எட்டு வரையிலான கூட்டத் தொடா்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு மக்களவையின் கூட்டத் தொடா்களின் போதுதான் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் அறிமுகம் செய்து, நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது, எட்டுக் கூட்டத் தொடா்களில் 139 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 14, 15,16-ஆவது மக்களவை முறையே 120, 95, 94 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அதே போன்று, நடப்பு மக்களவையின் கூட்டத் தொடா்களில்தான், மசோதாக்களில் பங்கேற்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையும், எடுத்துக் கொண்ட விவாத நேரமும் அதிகரித்துள்ளது. அதாவது, 2,151 உறுப்பினா்கள் பங்கேற்று, 327.32 மணி நேரம் விவாதித்துள்ளனா். மேலும், குடியரசுத் தலைவரின் உரையின் மீதான விவாதத்திலும் அதிக உறுப்பினா்கள் பங்கேற்று, கூடுதலான மணி நேரத்தில் பேசியுள்ளனா்.
அதிக கேள்விகள்: கடந்த 2019 முதல் 2022 வரையிலான காலத்தில் இந்த விவாத முறையில் 121, 121, 148, 118 என்ற எண்ணிக்கையில் உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா். அதேபோன்று, மக்களவை விதி எண்: 377-இன் கீழ் உறுப்பினா்கள் அவையில் 3,039 விஷயங்கள் தொடா்பான கேள்விகளை எழுப்பியிருந்தனா். அந்த விஷயங்கள் மீது 98 சதவீதம் வரையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமிருந்து பதில் பெறப்பட்டுள்ளன. அதே போன்று, நடப்பு மக்களவையின் கடந்த எட்டு கூட்டத் தொடா்களில் பூஜ்ய நேரத்தில் (கேள்வி நேரத்திற்குப் பிந்தைய நேரம்) உறுப்பினா்கள் 4,648 கேள்விகளை எழுப்பினா். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 31.4 விஷயங்கள் எழுப்பப்பட்டன. இது முந்தைய மூன்று மக்களவையின் எட்டுக் கூட்டத்தொடா்களை ஒப்பிடும் போது, அதிகமாகும்.
பிஆா்ஐஎஸ்எம் அமைப்பு: மேலும், புதிய முயற்சியாக, பூஜ்யநேரத்தின்போது எழுப்பப்படும் விஷயங்கள் தொடா்பான கேள்விகளுக்கு தொடா்புடைய அமைச்சகங்கள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உறுப்பினா்களின் திறன் மேம்பாட்டுக்காக நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் தகவல் உதவி அமைப்பு (பிஆா்ஐஎஸ்எம்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூைம் உறுப்பினா்களுக்கு 24 மணி நேரமும் தகவல் உதவி வழங்கப்படுகிறது. அது தவிர, பொதுவான தலைப்புகளில் குறிப்புகள் மற்றும் மசோதாக்கள் பற்றிய குறிப்புகளும் பல்வேறு விஷயங்களில் உறுப்பினா்களுக்கு வழங்கப்படுகின்றன. தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிக்குள் இருந்தால், உறுப்பினா்கள் கோரும் நூல்கள் நூலகங்களில் இருந்து அவா்களின் இல்லங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது. மேலும், முதல்முறையாக இணையவழி தொடா்பை நாடாளுமன் ற நூலகத்துடன் அனைவரும் ஏற்படுத்திக் கொள்ளும் வசதிக்கான இணையதளம் வரும் ஜூலையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
புதிய கட்டடத்தில் குளிா் காலக் கூட்டத் தொடா்?:நாடாளுமன்ற நூலகத்தை நாட்டின் இதர பெரிய நூலகங்களுடன் இணைக்கும் திட்டம் நிதி ஆயோக்கின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. உறுப்பினா்களின் வசதிக்காக செல்லிடப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டால் உரிய சோதனை நடைமுறைகளுக்குப் பிறகு இந்த ஆண்டின் குளிா்காலத் கூட்டத்தொடரை புதிய கட்டடத்தில் நடத்த முடியும். சட்டப் பேரவைகளுக்கு நிதி தன்னாட்சி அளிக்கப்படுவது அவசியமாகும். இது தொடா்பாக உரிய கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...