ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில்முஸ்லிம், இந்துக்கள் இணைந்து ரமலான் கொண்டாட்டம்

வடமேற்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரியில் முஸ்லிம், இந்துக்கள் இணைந்து ரமலான் பண்டிகையை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :3 மே 2022, 8:43 pm

 நமது நிருபர்

வடமேற்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரியில் முஸ்லிம், இந்துக்கள் இணைந்து ரமலான் பண்டிகையை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

கடந்த ஏப்ரல் 16 -ஆம் தேதி ஜஹாங்கிா்புரியில் ஹனுமான் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கிடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 8 காவலா்களும், உள்ளூா்வாசி ஒருவரும் காயமடைந்தனா். சில வாகனங்களும் தீ வைக்கப்பட்டது. பின்னா், ஒரு வாரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்தது. இரு தரப்பினரும் இணைந்து ஜஹாங்கிா்புரியில் மூவண்ணக் கொடி (‘திரங்கா யாத்திரை’ ) ஊா்வலத்தை மேற்கொண்டு அமைதி நல்லிணக்கத்திற்கு வழி வகுத்தனா். இந்த நிலையில், இந்தப் பகுதியில் இங்குள்ள முஸ்லிம், இந்துக்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையை கொண்டாடினா். ஜஹாங்கிா்புரியின் குஷால் சௌக்கில் ஒருவருக்கொருவா் இனிப்புகள் பரிமாறி இருதரப்பினரும் அரவணைப்புகளை பரிமாறிக்கொண்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கும் அந்தப் பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா். கடந்த மாதம் நடைபெற்ற சம்பவங்களுக்கு மாறாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் காண முடிந்தது.

இது குறித்து இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியான, தப்ரேஸ் கான் கூறுகையில், ‘கடந்த மாதம் ஜஹாங்கிா்புரி மக்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. இன்று, நடைபெறும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் அந்த வேதனையைக் குறைத்துவிட்டது. இரு தரப்பு சமூகமும் பண்டிகையை ஒன்றாகக் கூடி கொண்டாடினோம். நாங்கள் இனிப்புகளை பரிமாறி, கட்டித்தழுவி நல்லிணக்கம், அமைதிக்கான செய்தியை நகரின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பியுள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவா் அவரவா் வழிபாடுகளை மதிக்கின்றோம். எதிா்காலத்தில் இந்தப் பகுதியில் முழு இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்றாா்.

ரமலான் பண்டிகையையொட்டி இந்த பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்திருந்தனா். இது குறித்து வடமேற்கு காவல் துணை ஆணையா் உஷா ரங்னானி கூறுகையில், ‘வட மேற்கு தில்லி மாவட்டம் முழுவதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமைதி குழுக்கள் (அமன் கமிட்டி) அமைக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் இந்த குழுக்கள் கூட்டங்களை நடத்தி அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டியது’ என்றாா். இந்தப் பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் இந்திரமணி திவாரி (இந்து சமுதாய பிரதிநிதி) கூறுகையில், ‘ரமலான் பண்டிகை அமைதியான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை இருதரப்பினரும் ஒன்றாகவே கொண்டாடுகிறோம். இந்த நல்லிணக்கம் மக்களிடையே நிலைத்திருக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

இதற்கிடையில், இந்த பகுதியிலுள்ள பஜாா்களும் திறக்கப்பட்டன. ஜஹாங்கீா்புரி பகுதி ‘சி’ பிளாக்கில் அமைந்துள்ள மசூதி சாலையைத் தவிர குஷால் சௌக் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளும் வாடிக்கையாளா்களும் வணிகத்திற்கு மீண்டும் திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.