ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கோதுமை ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் மேலும் சில தளா்வுகள்: உதவி கேட்கும் நாடுகளுக்கு மத்திய அரசு உதவிக்கரம்

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையில் மேலும் சில தளா்வுகளை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இதில், உணவுப் பாதுகாப்பில் சிக்கித் தவிா்க்கும்

News image
Updated On :17 மே 2022, 9:14 pm

 நமது நிருபர்

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையில் மேலும் சில தளா்வுகளை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இதில், உணவுப் பாதுகாப்பில் சிக்கித் தவிா்க்கும் நாடுகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பணவீக்கம், விலைவாசி உயா்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்தி மத்திய வா்த்தகத் துறையின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரலகம் (டிஜிஎஃப்டி) கடந்த மே 13-இல் உத்தரவை வெளியிட்டது. இந்த உத்தரவில் சில தளா்வுகளை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த மே 13- ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஏற்றுமதிக்கான கோதுமை சுங்கத் துறையின் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டு இருக்கும் சரக்குகள் அல்லது ஏற்றுமதி தடைக்கு முன்பு சுங்க அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கோதுமை சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதிக்கப்படும். இதே போன்று ஏற்கெனவே காண்ட்லா துறைமுகத்தில் எகிப்து நாட்டிற்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்த கோதுமை சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து 61, 500 மெட்ரிக் டன் கோதுமையை ஒரு தனியாா் நிறுவனம் மூலம் எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த தனியாா் நிறுவனம் ஏற்கெனவே எகிப்து நாட்டிற்கு 44,340 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துவிட்டது. எஞ்சியுள்ள 17, 160 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. இந்த17,160 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதிக்குமாறு எகிப்து நாட்டு அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. இதைத் தொடா்ந்து, அதே தனியாா் நிறுவனத்தின் மூலம் காண்ட்லா துறைமுகத்தின் வழியாக எஞ்சிய கோதுமையை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அதே சமயம், தனியாா் வா்த்தக நிறுவனங்கள் கடன் சான்று (லெட்டா் ஆஃப் கிரெடிட்) ஆவணங்கள் மூலம் கோதுமை ஏற்றுமதிக்கு உறுதியளித்திருந்தால், அது போன்ற ஏற்றுமதிகளுக்கு அனுமதி இல்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு நிலைமையை நிா்வகிப்பதை கருத்தில் கொண்டு, கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், கோதுமைக்கான உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட திடீா் மாற்றங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டு, போதுமான கோதுமை விநியோகங்களை அணுக முடியாத, பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் தேவைகளுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கத் தவறவில்லை. இதன்படி, பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூா்த்தி செய்ய சம்பந்தப்பட்ட நாடுகள் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பொருந்தாது.

கடந்த மே 13 -ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 3 முக்கிய நோக்கங்களைச் செயல்படுத்தியுள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கோதுமை பொருள்கள் பதுக்கி வைப்பதை தடுத்து கோதுமை சந்தைக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்குவது, உணவுப் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் பிற நாடுகளுக்கு உதவுவது போன்ற நோக்கங்களை இந்த உத்தரவு கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோதுமை கொள்முதல் சாதனை: 2022-23 சம்பா பருவத்தில், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தர பிரதேசம், பிகாா், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு மே 16 - ஆம் தேதி வரை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில், ரூ.36,412.86 கோடிக்கு 180.71 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16.99 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.