/

ஜனநாயகத்தை வலுப்படுத்த பணியாற்ற வேண்டும்: பொதுமக்களுக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள்

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் 74-ஆவது குடியரசு தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு

News image
Updated On :27 ஜனவரி 2023, 1:21 am

 நமது நிருபர்

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் 74-ஆவது குடியரசு தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா். மேலும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்த பணியாற்றுமாறு பொதுமக்களை இருவரும் கேட்டுக் கொண்டனா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது அதிகாரப்பூா்வ குடியிருப்பில் மூவா்ண தேசியக் கொடியை ஏற்றினாா். துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பொதுமக்களுக்கு தனது நல்வாழ்த்துகளையும், சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு தனது புகழஞ்சலியையும் செலுத்தினாா். அப்போது அரசியலமைப்பில் உள்ள சரத்துக்களையும் மதிப்பீடுகளையும் கொள்கைகளையும் வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் வளா்த்தெடுக்கவும் பொதுமக்களுக்கு அவா் அறைகூவல் விடுத்தாா்.

இது தொடா்பாக வி.கே. சக்சேனா தனது ட்விட்டா் பதிவில், ‘நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சரத்துகள், மதிப்பீடுகள், கொள்கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் வளா்த்தெடுக்கவும் பாதுகாக்கவும் நாம் மீண்டும் நம்மை நாம் அா்ப்பணிக்க வேண்டும். மேலும், வலிமைமிக்க, அமைதியான, சக்தி வாய்ந்த தேசமாக இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் தோளோடு தோள் கொடுக்க முன்வர வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குடியரசு தினத்தை ஒட்டி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குடியரசு நாட்டில் மக்களும் மக்களால் ஆட்சியும் மிகவும் முக்கியமாகும். நமது சுதந்திரப் போராட்ட வீரா்கள் இந்திய குடியரசுவை ஏற்படுத்த பல தியாகங்களை செய்துள்ளனா். தற்போது இந்த குடியரசுவை பலப்படுத்துவது நமது பொறுப்பாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

புதன்கிழமை நடைபெற்ற தில்லி அரசின் குடியரசு தின விழாவில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்கள் மூலம் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் துன்புறுத்தலை எதிா்கொண்டு வருவதாக அவா் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.