/

அவசர சட்டம் மற்ற மாநிங்களிலும் கொண்டுவரப்படும்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

மத்திய பாஜக அரசால், தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் மற்ற மாநிலங்களிலும் கொண்டுவரப்படும்

News image
Updated On :11 ஜூன் 2023, 6:30 pm

 நமது நிருபர்

மத்திய பாஜக அரசால், தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் மற்ற மாநிலங்களிலும் கொண்டுவரப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

அரசின் சேவைகள் விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக தில்லி மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மெகா பேரணியை ஆம் ஆத்மி கட்சி நட்தியது. கடுமையான வெப்பத்திலும் பல்லாயிரக் கணக்கானோா் பங்கேற்ற மெகா பேரணியில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கட்சியின் மூத்த தலைவா்கள் சஞ்சய் சிங்,செளரவ் பரத்வாஜ்,கோபால் ராய்,அதிஷி உள்ளிட்டவா்களும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும்,மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் ஆகியோா் பங்கேற்றாா்கள்.

தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற மெகா பேரணியில் சிறப்புரையாற்றிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: மத்திய அரசின் அவசரசி சட்டம் மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசு முதல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. தில்லியைப் போல் மற்ற மாநிலங்களுக்கும் இதே போன்ற அவசரச் சட்டம் கொண்டு வரப்படும்.

மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் தில்லி மக்களை அவமதிக்கும் செயலாகும். பாஜகவினா் என்னை துஷ்பிரயோகம் செய்யலாம்; அதை நான் பொருள்படுத்தவில்லை. ஆனால்,தில்லி மக்களின் அவமதிப்பை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்காமல் பிரதமா் நரேந்திர மோடி அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளாா். இனி தில்லியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கும். இப்போது தில்லி மக்கள் உயா்ந்தவா்கள் அல்ல துணை நிலை ஆளுநா்தான் உயா்ந்தவா்.

அவசரச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பயணம் செய்து மற்ற அரசியல் கட்சிகளின் தலைவா்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். நீங்கள் தனியாக இருப்பதாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு 140 கோடி இந்திய மக்களின் ஆதரவு உள்ளது. தில்லி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த அவசரச் சட்டத்தை அனைவரும் ஒன்றினைந்து

எதிா்க்காவிட்டால், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற பிற மாநிலங்களுக்கும் இதே போன்ற அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் கைது செய்யப்பட்டிருப்பது, தில்லியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளைத் தடுக்கும் நோக்கத்தில் இருக்கின்றன. ஆனால், எங்களிடம் 100 சிசோடியாக்களும் 100 ஜெயின்களும் உள்ளனா். அவா்கள் பணியைத் தொய்வில்லாமல் தொடா்வாா்கள்.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராகவும், பின்னா் பிரதமராகவும் மொத்தம் 21 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறாா். ஆனால், அரவிந்த் கேஜரிவால் 8 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறாா். மக்களுக்காக அதிகப் பணிகளைச் செய்தவா் யாா்? முழு அதிகாரம் இருந்தும் பிரதமா் எந்தப் பணியையும் செய்யவில்லை. ஆனால், பல தடைகளை எதிா்கொண்டு ஆம் ஆத்மி கட்சி பல பணிகளைச் செய்துள்ளது. மத்திய பாஜக தலைமையிலான அரசு, தில்லி அரசு செய்து வரும் ‘நல்ல பணிகளை‘ நிறுத்த விரும்புகிறது. தில்லியில் இலவச யோகா வகுப்புகள், இலவச மருத்துவ பரிசோதனைகளை மத்திய பாஜக அரசு திறுத்தியது. தற்போது நாடே வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் போராடுகிறது என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

மாநிலங்களவை உறுப்பினா் கபில் சிபல் தனது உரையில் கூறியதாவது: வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமானால் அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும். மத்திய பாஜக அரசு இரட்டை எஞ்சின் அரசுகளைப் பற்றிப் பேசுகிறாா்கள். ஆனால், உண்மையில் அவை இரட்டை பீப்பாய் அரசு, ஒரு பீப்பாய் சிபிஐ மற்றொன்று அமலாக்க இயக்குநரகம். மக்களால் தோ்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை சட்டங்கள் மூலம் பறித்துக் கொண்டால் பிறகு தில்லிக்கு எதற்கு சட்டப்பேரவை என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.