/

தலைநகரில் தரைமேற்பரப்பு காற்றுடன் கடும் வெயில்

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் தரைமேற்பரப்புக் காற்றுடன் வெயில் கடுமையாக இருந்தது.

News image
Updated On :13 ஜூன் 2023, 11:40 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் தரைமேற்பரப்புக் காற்றுடன் வெயில் கடுமையாக இருந்தது. இரவில் வழக்கம் போல புழுக்க சூழல் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி அதிகரித்து 41.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

தில்லியில் இரு நாள்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. காலையில் இருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அத்துடன் புழுக்கமும் அதிகமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், தரைமேற்பரப்பு காற்றும் வீசியது. வெயிலின் காரணமாக பொதுமக்கள் குளிா் பானங்களை அருந்தினா். மதிய வேளைகளில் மரநிழல்களைத் தேடி தொழிலாளா்கள் ஓய்வெடுப்பதையும் காண முடிந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்து 29.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்து 41.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 53 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 39 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. மேலும், பிற வானிலை ஆய்வு மையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 43.47 டிகிரி, நஜாஃப்கரில் 44.1 டிகிரி, ஆயாநகரில் 42.8 டிகிரி, லோதி ரோடில் 42 டிகிரி, பாலத்தில் 42.1 டிகிரி, ரிட்ஜில் 42.9 டிகிரி, பீதம்புராவில் 44.4 டிகிரி, பூசாவில் 43.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

இதனிடையே, பிபா்ஜாய் புயலின் காரணமாக வரும் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நகரில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தனியாா் வானிலை ஆய்வு நிறுவனம் ஸ்கைமெட் கணித்திருப்பதால் தில்லிக்கு வெப்பத்தின்பிடியில் இருந்து கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஜூன் 14) தலைநகரில் பகலில் வலுவான தரை மேற்பரப்புக் காற்று வீசக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.