/

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் தில்லி அரசைகட்டுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது: முதல்வா் கேஜரிவால் சாடல்

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தால், தில்லியின் அமைச்சரவைக்கு மேலாக தலைமைச் செயலாளா் இடம் பெற்றுள்ளாா்

News image
Updated On :20 ஜூன் 2023, 9:26 pm

 நமது நிருபர்

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தால், தில்லியின் அமைச்சரவைக்கு மேலாக தலைமைச் செயலாளா் இடம் பெற்றுள்ளாா் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை சாடியுள்ளாா்.

தில்லியின் சேவைகள் மற்றும் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) முதல் கூட்டம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னா், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் மத்திய பாஜக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின் மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அவசரச் சட்டத்தை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் தில்லி அரசசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் மேலாக ஒரு அதிகாரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் தில்லி தலைமைச் செயலாளரை அமைச்சரவைக்கு மேல் வைத்துள்ளது. அமைச்சா்கள் எடுக்கும் முடிவுகளை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) கூட்டத்தின் சில நாள்களுக்கு முன்பு, அதிகாரி ஒருவரின் இடைநீக்கம் தொடா்பான கோப்பு எனக்கு வந்தது. அந்த அதிகாரியின் இடைநீக்க விவகாரம் தொடா்பான சில கேள்விகளை நான் முன்வைத்தேன். ஆனால் கோப்பு என்னிடம் திரும்பவில்லை. அந்தக் கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. என்.சி.சி.எஸ்.ஏ. - இன் இரண்டு உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்ததால், அந்த அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டாா். எனவே, தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையம் என்பது பயனற்றது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சாடினாா்.

28-இல் என்சிசிஎஸ்ஏ இரண்டாவது கூட்டம்: இதற்கிடையே, வரும் ஜூன் 28-ஆம் தேதி அன்று தேசியத் தலைநகா் குடுமைப் பணிகள் ஆணையத்தின் (என்சிசிஎஸ்ஏ) இரண்டாவது கூட்டத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.