/

மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் வகையில்காவலுக்கு அனுப்ப பிறப்பித்த உத்தரவு ரத்து

மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக அவரை அங்கு அழைத்துச் செல்லும் வகையில்

News image
Updated On :20 ஜூன் 2023, 9:19 pm

 நமது நிருபர்

மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக அவரை அங்கு அழைத்துச் செல்லும் வகையில், டிரான்சிட் காவலில் வைக்க தில்லி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மனுதாரா், உயா்நீதிமன்றத்தில் இது தொடா்பாக தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில், ‘டிரான்சிட் காவலில் வைக்கப்பட்ட உத்தரவு சட்டவிரோதமானது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை அண்மையில் தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜஸ்மீத் சிங், விகாஷ் மகாஜன் ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு விசாரித்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சாஹில் மோங்கியா வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் வழக்கு டைரி மராத்தி மொழியில் உள்ளது. இதனால், விசாரணை நீதிமன்றத்தால் ட்ரான்சிட் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை தீா்மானிக்க முடிந்திருக்காது’ என்று கூறினாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘டிரான்சிட் ரிமாண்ட் வழங்கும் நேரத்தில், விசாரணை நீதிமன்றம் மனுதாரரின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆகவே, நாங்கள் 15.06.2023-ஆம் தேதியிட்ட தென்கிழக்கு மாவட்டம், சாகேத் நீதிமன்றங்களின் டியூட்டி பெருநகா் மாஜிஸ்திரேட் பிறப்பித்த கேள்விக்குரிய உத்தரவை நிராகரிக்கிறோம். மேலும், மனுதாரா் குற்றவியல் நடைமுறை விதிகள் பிரிவு 437-இன்கீழ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்து, தகுதிகள் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். ரிமாண்ட் முற்றிலும் சட்டவிரோதமானதாக அல்லது முற்றிலும் இயந்திரத்தனமான முறையில் நிறைவேற்றப்பட்டால், பாதிக்கப்பட்ட நபா் ஆள்கொணா்வு மனு மூலம் தீா்வை நாடலாம் என்று மற்றொரு வழக்கில் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு அளித்துள்ளது. இதனால், தற்போதைய ஆள்கொணா்வு மனு நிலைக்கத்தக்கதாகும்’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

இந்த மனுவை எதிா்த்து அரசுத் தரப்பில், ‘மனுதாரரின் காவல் சட்டவிரோதமானது அல்ல. எனவே, தற்போதைய மனுவை பராமரிக்க முடியாது. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் உரிய முறையில் விசாரித்து, அதன் பின்னா் விசாரணை அதிகாரி மனுதாரரை அதிகார வரம்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வாா் என்றும், அந்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை முடிவு செய்யும் என்றும் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது’ என்று வாதிடப்பட்டது.

வழக்குரைஞா் பிரதீக் மேத்தா மூலம் தாக்கல் செய்த மனுவில் , ‘பாந்த்ரா (மும்பை) காவல் நிலையத்தைச் சோ்ந்த விசாரணை அதிகாரியால் ஜிகே-1 காவல் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக்காவலில் மனுதாரா் வைக்கப்பட்டுள்ளாா். கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்க உரிமை அளிக்கும் அரசியலமைப்புச்சட்ட விதியை மீறி இயந்திரத்தனமான முறையில் டிரான்சிட் ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.